சேறும், சகதியுமான சாலை: வாகன ஓட்டிகள் அச்சம்
கடலுார்: கடலுார் இம்பீரியல் சாலை சேறும், சகதியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். கடலுார் பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வரும் பண்ருட்டி, புதுச்சேரி மார்க்கமாக ஏராளமான பஸ்கள் எஸ்.என்.சாவடி - இம்பீரியல் சாலை இணைப்பு சாலையின் வழியாக தினசரி செல்கின்றன. இந்த சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது. பள்ளம் ஏற்பட்ட இடங்களில், மழைநீர் தேங்கி நிற்பதால் பள்ளம் இருப்பதற்கான அறிகுறி தெரியாமல் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் மத்தியில் குற்றச் சாட்டு எழுந்துள்ளது. எனவே, சாலையை சீரமைக்க இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் .