மேலும் செய்திகள்
மீட்கப்பட்ட 2 குளங்களை மேம்படுத்த முடிவு
19-Jan-2025
சிதம்பரம் : தமிழகத்தில் முன்னோடி திட்டமாக, 54 கோடி ரூபாயில் சிதம்பரத்தில் உள்ள அனைத்து குளங்களையும் இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.தமிழகத்தின் முன்னோடி திட்டமாக, சிதம்பரத்தில் அனைத்து குளங்களையும், ஒன்றுடன் ஒன்று இணைக்க வேண்டும் என, வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை கூறினார்.அதையடுத்து, இத்திட்டத்தை செயல்படுத்த நகராட்சி சார்பில், 54 கோடி ரூபாயில் திட்டம் தயாரித்து, நிதித்துறை பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் விரைவில் பணிகள் துவங்கப்படும் என, நகராட்சி சேர்மன் செந்தில்குமார் தெரிவித்தார்.இத்திட்டத்தின்படி, நகரில் உள்ள அனைத்து குளங்களும், ஆக்கிரமிப்பின் பிடியிலிருந்து மீட்கப்படும். தொடர்ந்து, குளங்களுக்கான நீர்வழிப் பாதைகள் கண்டறியப்பட்டு, புனரமைக்கப்படும். இந்த நீர்வழிப் பாதைகள், சங்கிலித் தொடர் போல, குளங்களுடன் இணைக்கப்படும்.இதன் மூலம், நீர்வரத்து உள்ள காலத்தில் பரவலாக அனைத்து குளங்களுக்கும் நீர் செல்லும் வாய்ப்பு உருவாகி, நிலத்தடி நீர்மட்டம் உயரும். இத்திட்டம் குறித்து செந்தில்குமார் கூறியதாவது:
மொத்தம், 54 கோடி ரூபாயில், சிதம்பரத்தில் உள்ள அனைத்து குளங்களும் இணைக்கப்பட உள்ளன. இரண்டாம் கட்டமாக, இயற்கை முறையில், துாய்மையான தண்ணீர் குளத்தில் நிரப்பப்படும். மழைநீர் வடிகால்களை சீரமைத்து, துாய்மையான தண்ணீரை வாய்க்காலுக்கு அனுப்ப, 125 கோடி ரூபாய்க்கு திட்டம் மதிப்பீடு தயார் செய்யப்படுகிறது. குளங்கள் இணைப்பு திட்டம், நிறைவேற்றப்பட்டால், தமிழகத்தில் முன்னோடி திட்டமாக, இத்திட்டம் மாறும்.இவ்வாறு அவர் கூறினார்.
19-Jan-2025