மேலும் செய்திகள்
கார் மோதி விபத்து: 4 பேர் படுகாயம்
23-Jun-2025
பண்ருட்டி: பண்ருட்டி நகராட்சியில் நத்தம் மனைப்பட்டாக்கள், சர்க்கார் புறம்போக்கு என மாறியதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பண்ருட்டி நகராட்சியில் 2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 60 ஆயிரம் பேர் உள்ளனர். 16 ஆயிரம் பேர் சொத்துவரி செலுத்துகின்றனர். நகர நில அளவை பிரிவில் நகரத்தில் 18 சதுர கி.மீ.பரப்பளவில் வார்டுகள் ஏ,பி,சி,டி., என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் 'ஏ' பிரிவில் - 69 பிளாக், 'பி' பிரிவில் -55 பிளாக், 'சி' பிரிவில்- 25 பிளாக், 'டி' பிரிவில்- 13 பிளாக் உள்ளன. நகர பகுதியில் உள்ள நத்தம் புறம்போக்கு பகுதியில் உள்ள இடங்களில் வசிப்போருக்கு சர்க்கார் மனை என, வருவாய்த்துறையினர் பட்டா வழங்கினர். பண்ருட்டி நகராட்சி பகுதியில் உள்ள நத்தம் மனைகளை பட்டாக்களாக மாற்ற கடந்த 2007ம் ஆண்டு நிலவரித்திட்ட தனி அலுவலகம் துவக்கப்பட்டு, அதற்கான பணிகள் கடந்த 2011ல் முடிந்தது. பின், நத்தம் பட்டாக்கள் வீட்டுமனை பட்டாக்களாக வழங்கப்பட்டது.இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு நில அளவை பதிவேட்டில் இருந்து கம்ப்யூட்டரில் ஏற்றிய போது பண்ருட்டி நகராட்சி எல்லையில் உள்ள 3, 000 பேரின் நத்தம் மனை பட்டாக்கள் அனைத்தும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் போது, சர்க்கார் புறம்போக்கு என தவறுதலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இப்பிரச்னை தமிழக அளவில் ஏற்பட்டதால் நில அளவை பிரிவு இயக்குனரகம் சார்பில் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் ஆன்லைன் பதிவேட்டில் நத்தம் மனைகளை சர்க்கார் புறம்போக்கு என உள்ள தவறை சரி செய்து தர வேண்டுமென, உத்தரவிடப்பட்டது. சர்க்கார் புறம்போக்கு என மாறியதால் பாதிக்கப்பட்ட பண்ருட்டி மக்கள், நத்தம் மனைகளாக மாற்றக் கோரி டி.ஆர்.ஓ., அலுவலகம், பண்ருட்டி நகர நில அளவை பிரிவு, பண்ருட்டி தாலுகா அலுவலகம் சென்றும் பயனில்லை. இதனால், வீடு விற்பனை உள்ளிட்ட சொத்து ஆவண பரிமாற்றம், பட்டா பெயர் மாற்றம், தான செட்டில்மெண்ட் ஆகியவை மேற்கொள்ள முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆன்லைனில் மாற்றக் கோரி விண்ணப்பித்த மனுக்கள் டி.ஆர்.ஓ., பரிந்துரைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என, பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து நிலஅளவை பிரிவு அலுவலர் ஒருவர் கூறுகையில், 'கடந்த 2018ம் ஆண்டு நகர பகுதியில் ஆன்லைனில் நத்தம் மனைகளை பதிவேற்றம் செய்த போது, சர்க்கார் புறம்போக்கு என பதிவானது. மீண்டும் நத்தம் மனைகளாக மாற்ற திருத்தம் செய்து, பயனாளிகள் பெயரில் ஆன்லைனில் ஏற்ற உத்தரவிடப்பட்டது. இதற்கான பட்டியல் டி.ஆர்.ஓ., அலுவலகத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கு கலெக்டர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். தாசில்தார் பிரகாஷ் கூறுகையில், 'பண்ருட்டி நகர நில அளவை பிரிவிற்கு தற்போது தான் புதிய சர்வேயர் நியமிக்கப்பட்டுள்ளார். சர்க்கார் புறம்போக்கு என்பதை ஆன்லைனில் திருத்தம் செய்ய முன்மொழிவுகள் ஆர்.டி.ஓ.,விற்கு அனுப்பபட்டுள்ளது. விரைவில் ஆன்லைன் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
23-Jun-2025