ஜியோடெக் முறையில் போட்டோ எடுக்க அலைகழிப்பு : தேசிய ஊரக திட்ட தொழிலாளர்கள் தவிப்பு
சேத்தியாத்தோப்பு: மாவட்டத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் மூதாட்டிகளை 'ஜியோடெக்' முறையில் புகைப்படம் எடுக்க நீண்டதுாரம் அலைய வைப்பதால் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மாவட்டத்தில் புவனகிரி ஒன்றியம், கீரப்பாளையம் ஒன்றியம், கம்மாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட ஒவ்வொரு ஊராட்சிகளிலும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் குளம் துார்வாருவது, வடிகால் வாய்க்கால் சீரமைப்பது, சாலையோரம் மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. தொழிலாளர்களுக்கு 250 ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது.இத்திட்டத்தில் நடக்கும் முறைகேடுகளை கண்டறிய மத்திய அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதன்படி, இத்திட்டத்தில் எந்தெந்த இடங்களில் பணிகள் நடக்கிறது. எந்தெந்த தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர் என்ற விவரங்களை கண்டறியும் விதமாக பணித்தள பொறுப்பாளர்கள் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களை பணிபுரியும் இடத்தில் இருந்து மொபைல் போன் மூலமாக 'ஜியோடெக்' முறையில் போட்டோ எடுத்து பி.டி.ஓ., அலுவலக அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் காலை 6:30 மணிக்கு தங்களது பணி அடையாள அட்டையுடன் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று இருப்பிட போட்டோ எடுக்க வேண்டும். 9:00 மணிக்கு பணி நடைபெறும் இடத்தில் ஒரு போட்டோ பதிவு, 12:00 மணிக்கு மீண்டும் ஒரு போட்டோ பதிவு செய்ய வேண்டும். சில நேரங்களில் 'ஜியோடெக்' முறையில் போட்டோ எடுப்பதற்கு மொபைல் போனில் டவர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இதன் காரணமாக வேலை நடக்கும் இடத்தில் இருந்து 1 கி.மீ.,துாரத்திற்கு மேல் தொழிலாளர்களை அழைத்துச் சென்று புகைப்படம் எடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. கடும் வெயிலில் நீண்ட துாரம் அழைத்துச் சென்று அலைக்கழிப்பதால் தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். வீண் அலைச்சலை தவிர்க்க எந்த இடத்தில் வேலை நடக்கிறேதா அங்கேயே 'ஜியோ டெக்' முறையில் போட்டோ எடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தற்போது பணியில் உள்ள பணித்தள பொறுப்பாளர்கள் அனைவரும் முன்னாள் ஊராட்சி தலைவர்களால் நியமிக்கப்பட்டவர்கள். இதனால் பணி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சமாக நடந்து கொள்கின்றனர். எனவே, தகுதியான நபர்களுக்கு வேலை கிடைக்க பணித்தள பொறுப்பாளர்களை மாற்றி புதிதாக நியமிக்க வேண்டும் என, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.