நெய்வேலி தொழிற்சங்க நிர்வாகிகள் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை
நெய்வேலி; மத்திய நிலக்கரித்துறை அமைச்சரை என்.எல்.சி., பி.எம்.எஸ்., தொழிற்சங்க நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். நெய்வேலி என்.எல்.சி., - பி.எம்.எஸ் தொழிற்சங்க தலைவர் வீர வன்னிய ராஜா தலைமையிலான நிர்வாகிகள் மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில்,' என்.எல்.சி., நிறுவனத்திற்கு வீடு, நிலம் வழங்கிய குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும், கிராஜுவெட்டி தர இயலாத தொழிலாளர்களுக்கு வருடத்திற்கு இரண்டு லட்சம் வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களின் ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தையை 2025 ஆம் ஆண்டுக்குள் முடிக்க வேண்டும், என்.எல்.சி., மருத்துவமனையை மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். என்.எல்.சி., யில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் 20 சதவிகிதம் போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், என்று மனுவில் கூறியிருந்தனர். இந்த சந்திப்பின் போது என்.எல்.சி.,- பி.எம்.எஸ் சங்க பொதுச் செயலாளர் சகாதேவராவ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.