| ADDED : ஜன 14, 2024 06:02 AM
நெய்வேலி : என்.எல்.சி., நிறுவனம், 2,400 மெகாவாட் திறனுடைய அனல் மின் உற்பத்தி திட்டத்தை ஒடிசாவில் அமைப்பதற்கான ஒப்பந்தத்தை 'பெல்' நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.இதுகுறித்து என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி கூறியதாவது:என்.எல்.சி., இந்தியா நிறுவனம், 2,400 மெகா வாட் திறனுடைய மின் நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தை, 'பெல்' எனப்படும் பாரத் மிகுமின் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் ஜார்சுகுடா மாவட்டத்தில், கிரீன் பீல்டு அல்ட்ரா சூப்பர் கிரிட்டிகல் தொழில்நுட்பம் அடிப்படையில் இந்த அனல்மின் நிலையம் செயல்படும்.இங்கு உற்பத்தி செய்யப்படும் 2,400 மெகாவாட் மின்சாரத்தை தமிழ்நாடு, ஒடிசா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு வழங்க ஏற்கனவே ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இந்த அனல்மின் திட்டத்திற்கான நிலக்கரி, ஒடிசாவின் ஜார்சுகுடா, சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள என்.எல்.சி.,யின், திறந்தவெளி சுரங்கங்களில் இருந்து கிடைக்கும்.இத்திட்டத்தின் முதல் அலகு, 2028-29ம் நிதியாண்டில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. நிலக்கரி சுரங்கத்தின் அருகிலேயே அமைக்கப்பட உள்ள அனல்மின் நிலையம் என்பதால், உற்பத்தி செலவு குறையும்.இதனால் மற்ற மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு இந்த என்.எல்.சி., அனல்மின் நிலையம் கடும் போட்டியாக திகழும். என்.எல்.சி., நிறுவனம் அதன் பயனாளிகளுக்கு குறைந்த விலை மின்சாரத்தை உற்பத்தி செய்து வழங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.