பழைய கலெக்டர் அலுவலக சாலை விரிவாக்க பணி
கடலுார்; கடலுார் பழைய கலெக்டர் அலுவலக சாலை ரூ. 30 லட்சம் மதிப்பில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.கடலுார் பழயை கலெக்டர் அலுவலக சாலையில், மாவட்ட நீதிமன்றம், எஸ்.பி., அலுவலகம், அரசு கருவூலம், அருங்காட்சியகம், சப் ஜெயில் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள், தனியார் பள்ளி, கல்லுாரிகள் செயல்பட்டு வருகிறது. இச்சாலையில் வாகனங்கள் மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் அதிகளவில் செல்வதால், எப்போதும் போக்குவரத்து நெரிசலாக காணப்பட்டு வருகிறது. இதனால், தினந்தோறும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள், மாணவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.இந்நிலையில், இச்சாலையை விரிவாக்கம் செய்து, நடைபாதை அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஏற்கனவே உள்ள 20 அடி சாலையை மாற்றி, 44 அடியாக விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இதற்கான பணிகள் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் விரைவில் துவங்கப்படவுள்ளது. இதற்காக பழைய கலெக்டர் அலுவலக சாலையில் மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பழைய கலெக்டர் அலுவலக சாலை துவங்கும் இடத்தில் இருந்து அண்ணா விளையாட்டு மைதானம் வரை இப்பணி நடைபெறவுள்ளது. இதன் மூலம் இச்சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாணப்படவுள்ளது.