உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெண்ணாடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் அசத்தல் பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற இலக்கு

பெண்ணாடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் அசத்தல் பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற இலக்கு

பெ ண்ணாடம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு, தனியார் பள்ளிக்கு நிகராக கல்வி கற்பிப்பது பெற்றோர் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது. பெண்ணாடத்தில் 1970ம் ஆண்டு அரசு பெண்கள் உயர் நிலைப் பள்ளி துவங்கப்பட்டது. 55 ஆண்டுகளுக்கு மேலாக இப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 1997ம் ஆண்டு மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அன்று முதல் இன்று வரை இப்பள்ளி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த 2018ம் ஆண்டில் சிறந்த பெண் பிள்ளைகள் படிக்கும் பள்ளியாக கல்வித்துறை சார்பில் தேர்வு செய்யப்பட்டு, அதே ஆண்டில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பரிசு வழங்கி, கவுரவிக்கப்பட்டது . பள்ளியின் முதல் தலைமை ஆசிரியராக சுந்தர்ராஜன் பணியில் இருந்தார். இவரை, தொடர்ந்து தமிழ்ச்செல்வி, சுபாங்கி, சற்குணாம்பிகை உள்ளிட்டோர் தலைமை ஆசிரியர்களாக பணிபுரிந்தனர். கடந்த 2004ம் ஆண்டு 6ம் வகுப்பிற்கு ஆங்கில வழி கல்வி துவங்கப்பட்டது. தற்போது 6 முதல் பிளஸ் 2 வரை ஆங்கில வழி கல்வி நடத்தப்படுகிறது. இப்பள்ளியில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மாணவிகள் படிக்கின்றனர். குறுவட்டம், மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். பேச்சு, கட்டுரை உட்பட பல்வேறு போட்டிகளில் மாவட்ட அளவில் முதல் பரிசுகளை பெற்றுள்ளனர். மாநில போட்டிகளிலும் பங்கேற்று, வெற்றி பெற்றுள்ளனர். பள்ளி மேலாண்மை குழு தலைவர் பானுப்பிரியா, துணை தலைவர் ரமேஷ், உறுப்பினர்கள் அய்யப்பன், இளையராஜா, ரமேஷ் ஆகியோர் பள்ளியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். தனியார் பள்ளிக்கு நிகரான கல்வி மாணவிகள் விடுமுறை எடுக்காமல் தினசரி பள்ளிக்கு வந்து படித்தாலே போதும் அவர்கள் தேர்வில் வெற்றி பெறுவது உறுதி. தமிழ் மற்றும் ஆங்கில வழி மாணவிகளுக்கு தனி கவனம் செலுத்தி தனியார் பள்ளிக்கு நிகராக தரமான கல்வியை கொடுக்கிறோம். அது மட்டுமல்லாமல் வகுப்பறையில் ஆங்கிலத்தில் பேசும் பழக்கங்களை ஏற்படுத்தி வருகிறோம். ஆங்கில பாடத்திற்கு ஸ்மார்ட் வகுப்பறை ஏற்படுத்தி தந்தால் மாணவிகளின் கல்வித்திறன் மேம்படும். நளினி, ஆங்கில ஆசிரியை. மாணவிகள் நலனில் முக்கியத்துவம் கடந்த 20 ஆண்டுகளாக பட்டதாரி தமிழாசிரியராக பணிபுரிகிறேன். பல ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சி கொடுத்து வருகிறேன். மாணவிகளின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தி வருகிறேன். சமுதாயத்தில் மாணவிகள் சிறந்து விளங்க வேண்டும். தமிழ் ஆசிரியர்கள் மணிவண்ணன், மஞ்சுளா ஆகியோர் உறுதுணையுடன் மாணவிகளை கல்வியில் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வோம். கலைச்செல்வி, தமிழ் ஆசிரியை. மாவட்ட அளவில் முதலிடம் பிடிக்க முயற்சி நான் கடந்த 2024ம் ஆண்டு இப்பள்ளியில் பணிபுரிகிறேன். இதற்கு முன் இதே பள்ளியில் 7 ஆண்டுகள் பணிபுரிந்தேன். இப்பள்ளி மாணவிகளின் கற்றல் திறன் தனியார் பள்ளிக்கு நிகராக கொடுத்து வருகிறோம். சிறப்பு வகுப்புகள் நடத்துகிறோம். எங்களுக்கு பெற்றோர், மாணவிகள் ஆதரவு உள்ளதால் கல்வி தரத்தை மேம்படுத்த உதவியாக உள்ளது. நடப்பு கல்வியாண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு இல்லாததால் பிளஸ் 2 மாணவர்களை நன்கு கண்காணித்து அவர்களின் தேர்ச்சியை அதிகரிக்க முழு முயற்சி எடுப்பேன். பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடிக்க பாடுபடுவோம். காமாட்சி, முதுகலை வேதியியல் ஆசிரியை. ஆசிரியர்கள் ஒத்துழைப்பால் தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு கடந்த 2013ம் ஆண்டில் இருந்து இப்பள்ளியில் பணிபுரிகிறேன். பொறுப்பு தலைமை ஆசிரியராகவும் பணிபுரிகிறேன். ஆசிரியர்களின் ஒத்துழைப்போடு தேர்ச்சி சதவீதத்தை ஒவ்வொரு கல்வியாண்டும் அதிகரித்து வருகிறோம். இங்கு, கம்மாபுரம், விருத்தாசலம், ஆவினங்குடி, மங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாணவர்கள் படிக்கின்றனர். மாணவிகள் பாதுகாப்பாக உள்ளனர். காலை, மாலை சிறப்பு வகுப்புகள் மற்றும் மாதாந்திர, வார தேர்வுகள் நடத்துகிறோம். வட்டம், மாவட்ட அளவில் நடந்த விளையாட்டுப் போட்டியில் 80க்கும் மேற்பட்ட மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். பள்ளியில் 'நடுவுல கொஞ்சம் கற்றலை தேடி' திட்டத்தில் மெல்ல கற்கும் மாணவர்களை கண்டறிந்து நல்ல கல்வியை போதிக்கிறோம். 6 முதல் 9ம் வகுப்பு வரை திறன் மேம்பாட்டு திட்டத்தில் சிறப்பு வகுப்புகள் நடக்கிறது. மாவட்ட அளவில் முதல் இடத்தில் மாணவிகளை தேர்ச்சி பெற வைப்பது எங்களது நோக்கம். வெங்கடேசன், வரலாறு ஆசிரியர். படிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு கடந்த 2011ம் ஆண்டு முதல் இப்பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிகிறேன். உதவி தலைமை ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளேன். மாணவர்களுக்கு கணிதம் என்றாலே கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் அந்த கஷ்டத்தை மீறி அவர்கள் படித்து அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வைத்து வருகிறேன். சிறப்பு வகுப்புகள் நடத்துகிறோம். பள்ளிக்கு கிராமப்புறங்களில் இருந்து அதிகளவில் மாணவிகள் வருகின்றனர். அவர்களின் கல்வி நம்பிக்கையை நிறைவேற்றி உள்ளோம். படிப்பின் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். கணித படத்தில் தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி கொடுப்பது எங்களது நோக்கம் ஆகும். காயத்ரி, கணிதம் ஆசிரியை. 100 சதவீதம் தேர்ச்சி இலக்கு கடந்த 2023-24ம் ஆண்டு பொதுத் தேர்வில் 98, 99 சதவீத மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். கடந்தாண்டு நடந்த பொதுத் தேர்வில் வேதியியல் பாடத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர் இதே தேர்ச்சியை இனி ஒவ்வொரு கல்வியாண்டும் கொடுப்போம். மாணவிகளின் ஒழுக்கம், கற்றல் திறன் மற்றும் விளையாட்டு போன்றவைகளுக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம். பெற்றோர் ஒத்துழைப்பு தந்தால் மாணவிகளை கல்வியில் மேம்படுத்துவோம். வரும் கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெறுவதே இலக்கு. அனிதா, முதுகலை வேதியியல் ஆசிரியை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி