| ADDED : நவ 20, 2025 05:49 AM
பெண்ணாடம்: அரசுப்பள்ளிக்கு விளையாட்டு மைதானம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. பெண்ணாடம் அடுத்த வடகரை அரசு உயர்நிலைப்பள்ளியில் 6 முதல் 10ம் வகுப்பு வரை 195 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளியில் வடகரை, நந்திமங்கலம், கோனுார், அருகேரி, எரப்பாவூர் உட்பட 10க்கும் மேற் பட்ட கிராமங்களில் இருந்து மாணவர்கள் வந்து, படிக்கின்றனர். இந்த பள்ளியில் விளையாட்டு மைதானம் இல்லை. இதனால், விளையாட்டுத்துறை சார்பில் குறுவட்ட, மாவட்ட, மாநில அளவில் நடக்கும் போட்டிகளில் மாணவ, மாணவிகள் பங்கேற்க முடியாத சூழல் உள்ளது. மாணவர்களின் கற்றல் திறன் மேம்படும் நிலையில், விளையாட்டுத் திறனை ஊக்குவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. விளையாட்டு மைதானம் அமைக்கக்கோரி, இப்பகுதி கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள் அரசு மற்றும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. அதனால், வடகரை அரசு பள்ளிக்கு விளையாட்டு மைதான வசதி ஏற்படுத்த கல்வித்துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ள னர்.