| ADDED : டிச 03, 2025 06:03 AM
திட்டக்குடி: திட்டக்குடி மின் கட்டணம் செலுத்தாத இரு கோவில்களின் மின் இணைப்பை மின்வாரிய அதிகாரிகள் துண்டித்ததால் கிராம மக்கள், பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர். கடலுார் மாவட்டம் திட்டக்குடி அடுத்த வெங்கனுாரில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பச்சையம்மன் கோவில் மற்றும் கம்ப பெருமாள் கோவில் உள்ளது. அதில், பச்சையம்மன் கோவிலுக்கு அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவர் பெயரிலும், கம்ப பெருமாள் கோவிலுக்கு சுந்தரராஜன் என்பவர் பெயரிலும் மின் இணைப்பு உள்ளது. இதில், பச்சையம்மன் கோவிலுக்கு கடந்த மாத மின் கட்டணம் ரூ. 5,789; கம்ப பெருமாள் கோவிலுக்கு ரூ. 3,837 மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இரு வாரங்களுக்கு மேலாக அறிவிப்பு கொடுத்தும் மின் கட்டணம் செலுத்தவில்லை. தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை மின்வாரிய ஊழியர்கள் இரு கோவில்களின் மின் இணைப்புகளை துண்டித்தனர்.பின்னர், நேற்று காலை 11:30 மணிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் இரு இணைப்புகளுக்கும் மின்கட்டணம் செலுத்தி, மீண்டும் இணைப்பு பெற்றனர். கோவில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.