தடுப்பணையில் மூழ்கி மாயமான மாணவரை தேடும் பணி தீவிரம்
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த கள்ளிப்பட்டு தென்பெண்ணையாறு தடுப்பணையில் மூழ்கி மாயமான மாணவரை, 2ம் நாளாக தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.பண்ருட்டி அடுத்த அக்கடவல்லி வடக்கு தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் சங்கர்,21; டிகிரி முடித்துள்ள இவர், நேற்று முன்தினம் மதியம் கள்ளிப்பட்டு தென்பெண்ணையாற்றில் தனது நண்பர் விவேக் என்பவருடன் குளிக்க சென்றார். அப்போது, ஆழமான பகுதியில் சங்கர் சிக்கி கொண்டார்.இதனையடுத்து நேற்று முன்தினம் முதல் பண்ருட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் போலீசார் குழுவினர்கள் ஆற்றில் சங்கரை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று 2வது நாளாக தேடும் பணி நடந்தது.இந்நிலையில், சங்கர் உறவினர்கள் தேடுதல் பணியை விரைவுபடுத்தவில்லை என கூறி வி.கே.டி.தேசிய நெடுஞ்சாலை கண்டரக்கோட்டையில் காலை 10:30 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர்.பண்ருட்டி போலீசார் மற்றும் துணை தாசில்தார் விஜய் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தேடும் பணியை விரைவுபடுத்துவதாக உறுதியளித்தின்பேரில் 11:00 மணிக்கு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.