| ADDED : டிச 04, 2025 05:18 AM
விருத்தாசலம்: ஸ்ரீமுஷ்ணம் அடுத்த சாத்தமங்கலம் கிராமத்தில், விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில், நெல்லில் மேம்படுத்தப்பட்ட சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகள் பற்றிய வெளிவளாக பயிற்சி நடந்தது. திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் பயிற்சியை துவக்கி வைத்து, நெல்சாகுபடி தொழில்நுட்பங்கள், குறுவை, சம்பா, பின் சம்பா, தாளடி, நவரை போன்ற பருவங்களுக்கேற்ற நெல் ரகங்கள், விதைநேர்த்தி மற்றும் உயிர் உரங்கள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கினார். வேளாண் உதவி பேராசிரியர் காயத்ரி மண்வள மேம்பாடு, பயோ பொட்டாஷ் தெளித்தல், நொதித்த அங்கக எரு நெல் வயலுக்கு இடுதல் உள்ளிட்டவைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார். வேளாண் உதவி பேராசிரியர் கலைச்செல்வி நெற்பயிரில் கோனோ விடர் பயன்பாடு, களைகொல்லி வகைகள், தெளிக்கும் அளவு, குறித்து விளக்கினார். தனுகா நிறுவனம் முனியன் நெற்பயிருக்குக்கேற்ற அனைத்து வகையான பூச்சிகொல்லி மற்றும் பூஞ்சாணக் கொல்லிகள் குறித்து விளக்கினார். இதில், ஸ்ரீமுஷ்ணம் வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.