கடைகள் கட்டும் பணியை வியாபாரிகள் தடுத்து நிறுத்தம்; நெல்லிக்குப்பத்தில் பரபரப்பு
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பத்தில் நகராட்சி சார்பில் கடைகள் கட்டும் பணியை வியாபாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது. நெல்லிக்குப்பம் ஆலை ரோட்டில் பல ஆண்டுகளுக்கு முன் நகராட்சி மூலம் கட்டப்பட்ட 18 கடைகள் இருந்தன. இவை இடிந்து விழும் நிலையில் இருந்ததால் அவற்றை இடித்து விட்டு புதியதாக கடை கட்ட முடிவு நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதனைத் தொடர்ந்து 1 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பில் 16 கடைகள் கட்ட கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டெண்டர் விடப்பட்டது. சென்னையை சேர்ந்தவர் டெண்டர் எடுத்த, 9 மாதங்களுக்கு பிறகே பணியை தொடங்கினர். பணி துவங்கி 4 மாதங்களுக்கு மேலாகியும் பள்ளம் தோண்டிய நிலையிலேயே இருந்தது. அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் டெண்டர் விட்டதோடு தங்கள் வேலை முடிந்ததாக அலட்சியமாக உள்ளனர். இதன் அருகிலேயே துவக்கப்பள்ளி உள்ளதால் பள்ளத்தில் மாணவர்கள் விழும் அபாயம் உள்ளது. இந்த டெண்டர் எடுத்தவரே நகராட்சி மருத்துவமனையில் 2 கோடி ரூபாய் மதிப்பில் கூடுதல் கட்டடம் கட்ட டெண்டர் எடுத்தார். அந்த பணியை கடந்த பிப்ரவரி மாதமே முடித்திருக்க வேண்டும். ஆனால் அந்த பணியும் பாதியளவே முடிந்துள்ளது. இதுபோன்ற ஒப்பந்ததாரருக்கே மீண்டும் கடை கட்டும் பணியை வழங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பணிகளை பார்வையிட வந்த உயர்அதிகாரிகள் உடனடியாக கடைகளை கட்டாவிட்டால் டெண்டர் ரத்து செய்யப்படும் என ஒப்பந்ததாரரை எச்சரித்தனர். இதனால் நேற்று பள்ளம் தோண்டிய இடத்தில் பணியை செய்யாமல் அருகில் உள்ள இடத்தில் பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டினர். முதலில் பள்ளம் தோண்டிய இடத்தில் கடைகளை கட்டிய பிறகே பக்கத்து இடத்தில் பணியை துவக்க வேண்டுமென வியாபாரிகள் பணியை தடுத்து நிறுத்தினர். இதனால், பரபரப்பு நிலவியது. அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் வியாபாரிகள் சமாதானம் ஆகாததால் பணியை மேற்கொள்ளாமல் திரும் பினர்.