உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முதலை கடித்து இருவர் காயம்; சிதம்பரத்தில் மக்கள் அச்சம்

முதலை கடித்து இருவர் காயம்; சிதம்பரத்தில் மக்கள் அச்சம்

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அருகே இரு வேறு இடங்களில் கொள்ளிடம் ஆற்றில் இறங்கிய இருவரை முதலை கடித்த சம்பவத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த குஞ்சமேடு கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன்,52; உள்ளூர் மீனவரான இவர் நேற்று முன்தினம் முட்டம் மேலத்தெருவில் உள்ள கொள்ளிடம் ஆற்றில், மீன் பிடிக்க வீசிய வலையை இழுக்க தண்ணீரில் இறங்கினார். அப்போது தண்ணீரில் இருந்த இரு முதலைகள், மனோகரன் கை மற்றும் கால்களை கடித்து இழுத்து சென்றன. மனோகரன் கூச்சலிடவே, முதலைகளை அவரை விட்டுவிட்டு தண்ணீருக்குள் சென்றன. கை மற்றும் காலில் படுகாயமடைந்த மனோகரன், முட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேல்தவர்த்தாம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஸ்டாலின் மகன் சாரதி,19; கை, கால் கழுவ குமராட்சியில் உள்ள காஞ்சவாய்க்காலில் இறங்கினார். அப்போது, முதலை ஒன்று சாரதி கையை கவ்வி இழுத்தது. உடன் அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டு, சாரதியை மீட்டனர். காயமடைந்த சாரதி, சிதம்பரம் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கனவே முதலைகள் அடிக்கடி ஊருக்குள் நுழைவது சமீப நாட்களாக அதிகரித்துள்ள நிலையில், தற்போது இருவரை முதலைகள் கடித்துள்ளதால் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் கொள்ளிடக்கரை கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !