பல்கலையில் மாணவியிடம் அத்துமீறல் அமைச்சரிடம் துணைவேந்தர் விளக்கம்
புதுச்சேரி, : புதுச்சேரியில் பல்கலை மாணவியிடம் அத்துமீறிய விவகாரம் தொடர்பாக, அமைச்சர் நமச்சிவாயத்திடம், துணைவேந்தர் விளக்கம் அளித்தார்.காலாப்பட்டு, தொழில் நுட்ப பல்கலை வளாகத்தில் கடந்த, 11ம் தேதி அங்கு படிக்கும் வட மாநில மாணவி, சக மாணவருடன் பேசிக்கொண்டிருந்தார். பல்கலையில் திடீரென நுழைந்த சிலர், அம்மாணவியை தாக்கினர். பாதிக்கப்பட்ட அந்த மாணவி, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து பல்கலை பதிவாளர் புகார் அளித்ததை தொடர்ந்து, 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் பல்கலை நிர்வாகம் வெளிப்படைத்தன்மையில்லாமல், நடந்து கொள்வதாக அரசியல் கட்சிகள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளன. இது குறித்து உயர்கல்வி செயலர், தலைமை செயலர், அமைச்சர்கள் எவ்வித விளக்கமும் மக்களுக்கு தெரிவிக்காதது அரசின் பொறுப்பற்ற செயல் எனவும், இந்த சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் ஒளிவு மறைவில்லாத வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளன.மேலும் வெளி ஆட்கள் பல்கலையில் நுழைவதை தடுக்கும் வகையில், பாதுகாப்பை அதிகரிக்கவும் வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரம் சம்மந்தமாக அமைச்சர் நமச்சிவாயம் பல்கலை துணை வேந்தர் மோகனை அழைத்தார்.இதையடுத்து துணை வேந்தர் மோகன், பல்கலை அதிகாரிகளுடன் அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து பல்கலை வளாகத்தில் நடந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது துணைவேந்தரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு அமைச்சர் விளக்கம் பெற்றார். இதைத்தொடர்ந்து, தொழில்நுட்ப பல்கலையில், பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும் என துணைவேந்தர் கோரிக்கை வைத்தார்.அதை ஏற்றுக்கொண்ட அமைச்சரும், பல்கலையில் பாதுகாப்பை அதிகரிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.