பள்ளி நேரத்தில் டவுன் பஸ் இயக்க கோரி விருத்தாசலம் அருகே கிராம மக்கள் மறியல்
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே, பள்ளி நேரத்தில் டவுன் பஸ் இயக்க கோரி, கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. விருத்தாசலம் அடுத்த பெரியகாப்பான்குளம், சின்னகாப்பான்குளம் கிராமங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த கிராமங்களில் உள்ள மாணவர்கள் பள்ளி, கல்லுாரிகளுக்கும், கிராம மக்கள் அத்தியாவசிய தேவைக்கு விருத்தாசலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினசரி வந்து செல்கின்றனர். இந்நிலையில் இந்த கிராமத்திற்கு பள்ளி நேரங்களில் டவுன் பஸ் இயக்கப்படததால், 4 கி.மீ., துாரம் வீரட்டிக்குப்பம் பஸ் நிறுத்ததிற்கு சென்று மாணவர்கள் பஸ் ஏறிச் செல்கின்றனர். பள்ளி நேரத்தில் டவுன் பஸ் இயக்க அப் பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதில், ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று, காலை 9:40 மணிக்குவிருத்தாசலம் - முத்தாண்டிக்குப்பம் சாலை, வீரட்டிக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே, அவ்வழியாக வந்த அரசு பஸ்சை சிறை பிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த ஊமங்கலம் போலீசார் மற்றும் விருத்தாசலம் போக்குவரத்து பணிமனை அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், வரும் 29ம் தேதிக்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில், பகல் 11:00 மணிக்கு கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.