வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: சில்வர் பீச்சில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
கடலுார்: கடலுார், தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின் படி, கடலுார் மாவட்டத்திலுள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடந்து வருகிறது. இன்று துவங்கி டிச 4ம் தேதி வரை கணக்கெடுப்பு படிவம் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களர்களால் வீடு வீடாக சென்று வழங்கப்பட உள்ளது. இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேவணாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் மீ ன்வளத்துறையின் சார்பில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான வாசகங்கள் அடங்கிய பதாகைகள் அமைக்கப்பட்ட படகு கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பாரா கிளைடிங் விளையாட்டு நடந்தது. வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான வாசகங்கள் ஒட்டப்பட்ட பாரா கிளைடிங் விளையாட்டில் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர். பொதுமக்கள் கணக்கெடுப்பு படிவத்தில் உள்ள விவரங்களுடன் வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களை ஒப்பிட்டு பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கடலுார் ஆர்.டி.ஓ., சுந்தரராஜன், தேர்தல் வட்டாட்சியர் சுரேஷ்குமார், குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.