அரசாணைப்படி நிரந்தரம் செய்வது எப்போது: மாதிரி பள்ளி பணியாளர்கள் தவிப்பு
கடலுார்: தமிழகத்தில் மாதிரிப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், அரசாணைப்படி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.தமிழகத்தில் முதற்கட்டமாக 2010ம் ஆண்டு 18 அரசு மாதிரி பள்ளிகளும், 2ம் கட்டமாக 2013ம் ஆண்டு 26 அரசு மாதிரி பள்ளிகளும் என, மொத்தம் 44 பள்ளிகள் அமைக்கப்பட்டது. இப்பள்ளிகளுக்கு தலா ஒரு இளநிலை உதவியாளர், ஒரு ஆய்வக உதவியாளர் மற்றும் ஒரு நுாலகர் ஆகிய மூவருக்கும் மாத தொகுப்பு ஊதியம் 6,000 ரூபாய் எனவும், ஒரு அலுவலக உதவியாளர், ஒரு துப்புரவாளர், ஒரு தோட்டக்காரர் மற்றும் ஒரு இரவுக் காவலர் ஆகியோர்களுக்கு மாத தொகுப்பூதியம் 4,500 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டு, 14 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 27-.01.-2025 வெளியிடப்பட்ட அரசாணையில், அனைத்து பணியிடங்களும் (இளநிலை உதவியாளர் மற்றும் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள்) நிரந்தரம் எனவும், நுாலகர், அலுவலக உதவியாளர், துப்புரவாளர், தோட்டக்காரர் மற்றும் இரவு காவலர் பணியிடங்கள் தற்காலிகம் என, கூறப்பட்டுள்ளது.மேலும், தற்போது பணியில் இருப்பவர்கள் ஓய்வு பெறும் வரை பணிபுரிந்து கொள்ளலாம், இவர்கள் ஓய்வு பெறும்போது அந்த பணியிடத்தை ஒப்படைப்பு செய்ய வேண்டும், அதுவரையில் இவர்களுக்கு நிரந்தர ஊதியம் அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாணை பிறப்பித்தும், இது நாள் வரையில், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது பணியாளர்கள் மத்தியில் மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக, பள்ளிகளின் அளவை பதிவேட்டில் பதிவு செய்து, உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு வழிகாட்டுமாறு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு இயக்குனர் கடிதம் அனுப்பி உள்ளார். ஆனால் இயக்குனர் அளித்த கடிதத்தை கண்டு கொள்ளப்படவில்லை.அரசாணை வெளிவந்து 80 நாட்களை கடந்த நிலையில், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது, பணியாளர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. எனவே, இது தொடர்பாக உயர் அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக அரசு மாதிரிப் பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு நிரந்தர ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குமாறு, தமிழ்நாடு அரசு மாதிரிப் பள்ளி ஆசிரியர் அல்லாத பணியாளர் நலச்சங்கத்தினர் அரசை வலியுறுத்தி உள்ளனர்.