| ADDED : டிச 31, 2025 04:42 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே தி.மு.க., நிர்வாகியை கண்டித்து, விடியல் மகளிர் பஸ்சை பெண்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. விருத்தாசலம் அடுத்த காவனுாரை சேர்ந்த மகளிர் 20க்கும் மேற்பட்டோர், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் தே.பவழங்குடி - மேலப்பாளையூர் கிராம சாலையில் உள்ள பெரிய வாய்க்காலை துார்வாரும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காவனுார் குப்புசாமி மகன் கருணாநிதி, 60; தி.மு.க., மாவட்ட பிரதிநிதி; அங்கு வந்தார். அவர், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஜெயராமன் மனைவி ஜெயராணி என்பவரிடம் மண்வெட்டி, அரிவாள் ஏன் எடுத்து வரவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த கருணாநிதி, ஜெயராணியை திட்டி, தாக்க முற்பட்டார். இதனால் அதிருப்தியடைந்த பெண் பணியாளர்கள், 20க்கும் மேற்பட்டோர் திரண்டு, கருணாநிதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அவ்வழியே வந்த மகளிர் விடியல் பயண டவுன் பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி மற்றும் போலீசார் பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, அரசு பஸ்சை விடுவித்து, பெண்கள் கலைந்து சென்றனர். இதனால், மதியம் 1:15 முதல், 1:45 மணி வரை அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது.