உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தடுப்பணையில் 12 இடங்களில் போர்வெல் போடும் பணி தீவிரம்!

தடுப்பணையில் 12 இடங்களில் போர்வெல் போடும் பணி தீவிரம்!

2.30விருத்தாசலம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், கோமுகி அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மற்றும் ஓடைநீர், கிராம விளை நிலங்களில் இருந்து வழிந்தோடி வரும் மழைநீர் இணைந்து, மணிமுக்தாறு வழியாக, விருத்தாசலம் அடுத்த மேமாத்துார் அணைக்கட்டு வந்தடையும். அங்கிருந்து பாசன வாய்க்கால் வழியாக கொடுக்கூர் பெரிய ஏரி, சித்தேரி, சின்னக்குட்டி உடையார், பெரம்பலுார், பரவளூர், தொரவளூர், சாத்துக்கூடல், கோமங்கலம் உட்பட 15 கிராம ஏரிகளுக்கு நீர்ப்பிடிப்பு கிடைக்கிறது.இதன் மூலம் 5,000 ஏக்கர் விளை நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது. உபரி நீர் மணிமுக்தாறு வழியாக வழிந்தோடி, சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு வழியாக கடலில் கலந்து வீணாகிறது. இதை தடுக்கும் வகையில் பரவளூரில் கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் 12 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை கட்டப்பட்டது. இருப்பினும் மணவாளநல்லுார் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் நீர்மட்டம் வெகுவாக சரிந்து, போர்வெல் பாசனம் செயலிழந்தது.இதையடுத்து, மணிமுக்தா நீர்ப்பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் கிராம மக்கள் இணைந்து, மணவாளநல்லுாரில் தடுப்பணை கோரி, பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அதுபோல், 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டம் மூலம் மணவாளநல்லுாரில் தடுப்பணை கேட்டு, ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்தார். இதையேற்று, 25.20 கோடி ரூபாயில் தடுப்பணை கட்ட தமிழக அரசு அனுமதி வழங்கியது.கடந்த ஜனவரி மாதம், 223 மீட்டர் நீளம், 125 மீட்டர் உயரத்தில் தடுப்பணை கட்டுமான பணிகள் துவங்கி, முழுவதுமாக பணிகள் முடிந்துள்ளது. தற்போது, கரைகளை பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. அத்துடன், நிலத்தடி நீர் குறையாமல் பாதுகாக்கும் வகையில், தமிழகத்திலேயே முதல் முறையாக விருத்தாசலம் மணிமுக்தாறு தடுப்பணையில், நீர்வளத்துறை புதிய யுக்தியை அறிமுகம் செய்தது.அதன்படி, தண்ணீர் தேங்கி நிற்கும் தடுப்பணை மேற்பகுதியில், போர்வெல் மூலம் குழாய்கள் பதித்து பைப்புகள் இறக்கப்படும். இதன் மூலம் பூமிக்கே மீண்டும் நீரை திருப்பி அனுப்பி, நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் பாதுகாக்கும் புதிய முயற்சியாக போர்வெல் போடும் பணிகள் துவங்கியுள்ளது.இதற்காக, தடுப்பணையின் மேற்பகுதியில் வல்லுனர்கள் மூலம் 100 மீட்டரும், அதற்கடுத்து 75 மீட்டர் இடைவெளியில் 12 இடங்களில் 150 அடி ஆழத்தில் போர்வெல் போடப்படுகிறது. போர்வெல் மேல்புறம் கான்கிரீட் தடுப்புகள் அமைத்து, தண்ணீர் மட்டும் செல்லும் வகையில் அமைக்கப்பட உள்ளது. பருவமழை மற்றும் வெள்ள காலங்களில் பாய்ந்தோடி வரும் தண்ணீர், போர்வெல் குழாய்கள் மூலமாக எளிதாக பூமிக்கு சென்றடையும்.இதன் மூலம் கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் போர்வெல்கள் செயலிழக்காமல், விவசாய பயணிகளை தடையின்றி மேற்கொள்ளலாம். நீர்வளத்துறை செயற்பொறியாளர் பாலமுருகன், உதவி செயற்பொறியாளர் எத்திராஜலு, உதவி பொறியாளர் வெங்கடேசன் ஆகியோர் பணிகளை பார்வையிட்டு, துரிதப்படுத்தி வருகின்றனர். மாநிலத்திலேயே முதல் முறையாக விருத்தாசலம் மணிமுக்தாற்றில் நவீன முறையில் நீர்மட்டத்தை சேமிக்கும் வழிமுறைகள் கையாளப்படுவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை