தர்மபுரி, தர்மபுரியில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று வக்கீல்கள், கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.தர்மபுரி வக்கீல்கள் சங்க, அவசர நிர்வாகிகள் கூட்டம், நேற்று முன்தினம், வக்கீல்கள் சங்க கட்டடத்தில், தலைவர் அழகமுத்து தலைமையில் நடந்தது. செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருந்து, 7 கி.மீ., துாரத்தில் மாவட்ட சிறப்பு நீதிமன்றம் மற்றும் சிறப்பு சார்பு நீதிமன்றம், பழைய நீதிமன்ற கட்டடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேற்படி இரு நீதிமன்றங்களையும், மீண்டும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும். வழக்கு நகல் பெறுவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்ற அலுவலங்களில் வக்கீல்கள் அமர உரிய இருக்கைகள் ஏற்பாடு செய்ய வேண்டும். வக்கீல்களுக்கு உரிய மரியாதையுடன், நீதிமன்ற பணியாளர்கள் சரியான முறையில் பதிலளிக்க வேண்டும். திறந்த நீதிமன்றத்தில் வக்கீல்கள், நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் அரசு தரப்பு சாட்சியங்களை தவிர, திறந்த நீதிமன்றத்தில் இருக்கைகளில் அமர, வேறு நபர்களுக்கு அனுமதிக்கக்கூடாது. வக்கீல், எழுத்தர்கள் பதிவுபெற்ற அடையாள அட்டையுடன் வந்தால் மட்டுமே, திறந்த நீதிமன்றங்கள் மற்றும் அலுவலகங்களில் அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட, 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இத்தீர்மானங்களை செயல்படுத்த வலியுறுத்தி, நேற்று முதல், 2 நாட்களுக்கு (நவ. 27, 28) வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிமன்றங்களில் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன.