உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கடும் வறட்சியால் வரத்து சரிவு: தர்பூசணி விலையில் உயர்வு

கடும் வறட்சியால் வரத்து சரிவு: தர்பூசணி விலையில் உயர்வு

அரூர்: தர்மபுரி மாவட்டத்தில், வரத்து சரிவால் தர்பூசணி பழத்தின் விலை உயர்ந்துள்ளது.தர்மபுரி மாவட்டத்தில், அக்னி நட்சத்திரம் துவங்குவதற்கு முன்பே, 37.7 டிகிரி செல்ஷியல் அதாவது, 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள், காலை, 10:00 மணிக்கு மேல் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். கோடை வெயிலின் உஷ்ணத்தை தணிக்கும் வகையில், அரூர், மொரப்பூர், கம்பைநல்லுார் உள்ளிட்ட பகுதிகளில் தர்பூசணி, முலாம் பழம் போன்ற குளிர்ச்சியான பழ வகைகள் மற்றும் கரும்பு ஜூஸ் ஆகியவற்றை சாலையோரங்களில் தற்காலிக கடைகள் அமைத்து, வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். டூவீலர்களில் செல்வோர், இந்த கடைகளில் பழங்களை வாங்கி சாப்பிட்டு சூட்டை தணிக்கின்றனர். இந்நிலையில் தர்பூசணி வரத்து சரிவால், அதன் விலை உயர்ந்துள்ளதுடன், அரூரில் தர்பூசணி பழத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பழ வியாபாரி வெங்கடேசன் கூறியதாவது: சீசன் துவக்கத்தில் மொரப்பூர், கம்பைநல்லுார், அனுமன்தீர்த்தம் பகுதியில் இருந்து விவசாயிகளிடமிருந்து, தர்பூசணியை மொத்தமாக வாங்கி வந்து, கிலோ, 20 ரூபாய்க்கு விற்பனை செய்தோம். கடந்த, 10 நாட்களுக்கு முன், அதன் விலை அதிகரித்து, 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது நிலவும் கடும் வறட்சியால், அரூர் சுற்று வட்டாரத்தில் தர்பூசணி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. தர்பூசணி அதிகமாக விளையும் திண்டிவனம், மேல்மருவத்துார் பகுதியிலும் போதிய விளைச்சல் இல்லாததால், தர்பூசணிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், அதன் விலையும் அதிகரித்து கிலோ, 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இருந்தபோதிலும், போதிளவில் தர்பூசணி பழம் கிடைக்கவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்