ரூ.3 லட்சம் மதிப்புள்ள 1 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்
ரூ.3 லட்சம் மதிப்புள்ள 1 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்பாலக்கோடு, நவ. 10-தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு புதிய தேசிய நெடுஞ்சாலை வழியாக, கர்நாடகாவில் இருந்து, தமிழக அரசு தடைசெய்த புகையிலை பொருட்களை கடத்துவதாக, பாலக்கோடு டி.எஸ்.பி., மனோகரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து, அவரது உத்தரவின் படி, நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு மகேந்திரமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., ரவிச்சந்திரன் தலைமையில், போலீசார் கொலசனஹள்ளி புதிய தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது, அவ்வழியாக டயோட்டா இன்னோவா கார் வந்தது. போலீசாரை கண்டதும் காரை நிறுத்திவிட்டு, டிரைவர் தப்பினார். தொடர்ந்து, போலீசார் காரை சோதனை செய்தபோது அதில், 40 மூட்டைகளில், 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, ஒரு டன் புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. காருடன், புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.