தர்மபுரி : தர்மபுரி கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது.இதில் அவர் பேசியதாவது:தர்மபுரி மாவட்டத்தில், கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை, 942 மி.மீ., மழை பெய்துள்ளது. நடப்பாண்டின் ஜனவரி முதல் தற்போது வரை, 254.64 மி.மீ., மழை பெய்துள்ளது. வேளாண் உழவர் நலத்துறையில், 1.72 ஹெக்டேர் பரப்பளவில் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள் உள்ளிட்டவற்றை சாகுபடி செய்ய நடப்பாண்டுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தர்மபுரி மாவட்டத்துக்கு வருடாந்திர உரத்தேவையில், 41 டன் என கணக்கிட்டு தற்போது வரை, 14 டன் யூரியா, டி.ஏ.பி.,பொட்டாஷ், காம்ப்ளக்ஸ், எஸ்.எஸ்.பி., உள்ளிட்ட உரங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் உர விற்பனை கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில், ஜூன் மாத இறுதி வரை நெல், எண்ணெய் வித்துக்கள், கரும்பு, மரவள்ளி, மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்களுக்கு, 4,514 விவசாயிகளுக்கு, 45.12 கோடி ரூபாய் பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு பேசினார்.டி.ஆர்.ஓ., பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், கோபாலபுரம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் பிரியா, வேளாண்மை இயக்குனர் (பொ) குணசேகரன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் (பொ) மலர்விழி உள்பட பலர் பங்கேற்றனர்.