வனத்துறையினர் விரட்டியும் இடம்பெயராத 60 யானைகள்
ஓசூர், டிச. 20-கிருஷ்ணகிரி மாவட் டம், தேன்கனிக்கோட்டை கஸ்பா வனப்பகுதியில் முகாமிட்டிருந்த, 60 க்கும் மேற்பட்ட யானைகளை, நேற்று முன்தினம் மாலை வனத்துறையினர் பட்டாசு வெடித்து, ஜவளகிரி வனப்பகுதிக்கு விரட்டிச் சென்றனர். ஆனால் அவை, அதே வனப்பகுதியில், 3 பிரிவுகளாக பிரிந்து, பாலேகுளி, திம்மசந்திரம் மற்றும் கிரியனப்பள்ளி பகுதிகளில் சுற்றித்திரிந்தன. அவை, அருகே உள்ள கிராமங்களில் நுழைந்து பயிர்களை தின்று சேதப்படுத்தின. அவற்றை நேற்று அதிகாலை, தேன்கனிக்கோட்டை வனச்சரகம், திம்மசந்திரம் வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டியடித்தனர்.அதேபோல சானமாவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய, 'கிரி' என்கிற ஒற்றை யானை டி.கொத்தப்பள்ளி கிராமத்தில் நுழைந்து ராகி, சோள பயிர்களை சேதப்படுத்தியது. அதை சானமாவு வனப்பகுதிக்கு வனத்துறையினர் விரட்டியடித்தனர். யானைகளின் தொடர் படையெடுப்பால், விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.