காவிரியில் மூழ்கி சென்னை டிரைவர் பரிதாப பலி
ஒகேனக்கல்: ஒகேனக்கல் சுற்றுலா சென்ற சென்னை ஆட்டோ டிரைவர் காவிரி ஆற்றில் மூழ்கி இறந்தார். சென்னை, ஆர்.கே.நகர், தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் பிரபு, 38; ஆட்டோ டிரைவர். நேற்று தன் நண்பர்கள், 10 பேருடன் காரில் ஒகேனக்கலுக்கு சுற்றுலா வந்தார். ஒகேனக்கலில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர். நண்பகல், 1:00 மணியளவில் நண்பர்களுடன் கோத்திக்கல் காவிரி ஆற்றில் குளித்த போது, பிரபு ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். நீச்சல் தெரியாததால் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. உடனடியாக நண்பர்கள் ஒகேனக்கல் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர், பரிசல் ஓட்டிகள் உதவியோடு ஆற்றில் பிரபுவை சடலமாக மீட்டனர். ஒகேனக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.