உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கூட்டணி கட்சியினர் எதிர்ப்பால் 2வது முறையாக நன்றி அறிவிப்பு போஸ்டர் ஒட்டிய தி.மு.க., - எம்.பி.,

கூட்டணி கட்சியினர் எதிர்ப்பால் 2வது முறையாக நன்றி அறிவிப்பு போஸ்டர் ஒட்டிய தி.மு.க., - எம்.பி.,

அரூர்: கூட்டணி கட்சியினர் எதிர்ப்பால், 2வது முறையாக தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., சார்பில் நன்றி அறிவிப்பு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.தர்மபுரி லோக்சபா தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிட்ட வக்கீல் மணி, 4,32,667 ஓட்டுக்களும், பா.ம.க., வேட்பாளர் சவுமியா, 4,11,367 ஓட்டுக்களும் பெற்றனர். இதில், 21,300 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் மணி வென்றார். அரூர் தொகுதியில், கூடுதலாக பெற்ற, 39,675 ஓட்டுக்களால்தான், தி.மு.க., வேட்பாளர் வெற்றி பெற்றார்.இந்நிலையில் வக்கீல் மணி எம்.பி., சார்பில், நன்றி தெரிவித்து கடந்த சில நாட்களுக்கு முன், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டது. அதில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி, பன்னீர்செல்வம், தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து, அவர்கள் படங்கள் இருந்தது. 'இண்டியா' கூட்டணி தலைவர்கள் படம் இல்லாததால், வி.சி., கட்சியினர் கடும் அதிருப்தி அடைந்தனர்.இது தொடர்பாக வி.சி., நிர்வாகிகள், சமூக வலைதளங்களில், தி.மு.க., - எம்.பி.,க்கு எதிராக பதிவிட்டனர். அதில், 'ஒன்று சேர்ந்து கோவிலை கட்டினோம். கும்பாபிஷேகம் முடிந்த பின் ஒருவருக்கு மட்டுமா கோவில் சொந்தம், லோக்சபா தேர்தலில், 'இண்டியா' கூட்டணி சார்பில் போட்டியிட்ட வக்கீல் மணி வென்றார் என்பதை விட, வி.சி., கட்சி வென்றுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு சொல்லுவோம். குறிப்பாக, அரூர் சட்டசபை தொகுதியில், வி.சி., பங்களிப்பும், உழைப்பும், ஓட்டு வங்கியும் தலைவர் திருமாவளவனின் ஆணைக்கிணங்க அதிகளவில் இருந்து, வெற்றிக்கு பயன்பட்டதை யாரும் மறைத்து விட முடியாது. தி.மு.க., தலைமையும் இதை உணர்ந்திருக்கும்' என்ற பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது.இந்நிலையில் நேற்று முன்தினம், தி.மு.க., -எம்.பி., மணி சார்பில், மீண்டும் நன்றி அறிவிப்பு போஸ்டர் ஒட்டப்பட்டது. அதில், ஏற்கனவே இருந்தவர்களின் படங்களுடன், கூட்டணி கட்சி தலைவர்களான, வி.சி., தலைவர் திருமாவளவன், கொ.ம.தே.க., பொதுச்செயலாளர் ஈஸ்வரன் ஆகியோரது படங்கள் இடம் பெற்றுள்ளன.இது குறித்து, தி.மு.க., நிர்வாகிகள் கூறுகையில்,'போஸ்டரில் கூட்டணி கட்சி தலைவர்கள் படம் இடம் பெறாததால், அக்கட்சி நிர்வாகிகள் கடும் அதிருப்தியில், எதிர்ப்பு தெரிவித்தனர். அரூர் சட்டசபை தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி, 20, 21 ஆகிய, 2 நாட்கள் நடக்கிறது. இதில் கலந்து கொள்ளும், தி.மு.க., - எம்.பி.,க்கு சில இடங்களில் கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்க உள்ளதாக தகவல் கிடைத்தது. அதனால், அவர்கள் எதிர்ப்பை சரிகட்டவும், சமாதானப்படுத்தும் வகையிலும், 2வது முறையாக நன்றி அறிவிப்பு போஸ்டர் ஒட்டப்பட்டது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ