தர்மபுரி: தர்மபுரி நகர பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை, தடங்கத்திலுள்ள மக்கும், மக்காத குப்பையை தரம் பிரிக்கும் கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில், சில மாதங்களாக நகரப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை, தர்மபுரி எஸ்.வி.ரோட்டிலுள்ள பச்சையம்மன் கோவில் சுடுகாடு அருகே கொட்டப்படுகிறது. காலை, மாலை நேரங்களில் குப்பைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து எரிப்பதால், சுற்றுச்சூழல் மாசடைகிறது. இதனால், இப்பகுதியிலுள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள், நிறுவனங்களில் வேலை செய்யும் பணியாளர்கள், பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என அனைவரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கூடுதலாக குப்பை தொட்டிகள் வைத்து, குப்பையை தடங்கம் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்ல, கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து, தர்மபுரி நகராட்சி கமிஷனர் புவனேஸ்வரனிடம் கேட்டபோது: நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை, தடங்கம் கிடங்கிற்கு தரம் பிரிக்க கொண்டு செல்லப்படுகிறது. எஸ்.வி.,ரோடு, சுடுகாடு பகுதியை சுற்றியுள்ள நபர்கள் மற்றும் இரவு நேரங்களில் அத்துமீறி, குப்பை கொட்டியதால் அதிகளவில் தேக்கமடைந்தது. அதற்கு இரவு நேரங்களில் சிலர் தீ வைத்துள்ளனர். இதை தடுக்க, நகராட்சி தொடர்ந்து, நடவடிக்கை எடுத்து அங்குள்ள குப்பை அகற்றப்பட்டு வருகிறது. மேலும், குப்பை கொட்டும் நபர்கள் குறித்து, தனியாக ஆட்கள் வைத்து கண்காணித்து வருகிறோம். அதையும் மீறி, குப்பை கொட்டும் நபர்கள், கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.