தர்மபுரி: தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில், ஓட்டுனர்களுக்கான, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம், தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமை வகித்தார்.சேலம் சரக துணை போக்குவரத்து ஆணையர் பிரபாகரன் பேசியதாவது: ஓட்டுனர்கள் செய்யும் தொழிலில் பொறுப்புடன் இருக்க வேண்டும். சாலையில் வாகனத்தை இயக்கும் போது, கவனமாக இருக்க வேண்டும். நம்மால் பொதுமக்களுக்கு எந்தவித அச்சுறுத்தல், பிரச்சனையும் ஏற்படகூடாது என்பதை, ஓட்டுனர்கள் உணரவேண்டும். சமீபத்தில் நடந்த, தொப்பூர் விபத்து, மிகவும் கவலை அளிக்கிறது. ஒருவர் விபத்தில் இறந்தால், அவர்களின் குடும்பம் பொருளாதார ரீதியாக, மிக கடுமையாக பாதிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில், 2023ம் ஆண்டு நடந்த சாலை விபத்துகளில், 17,200 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில், 50 சதவீதம் பைக்கில் சென்று விபத்தில் சிக்கியவர்கள். குறிப்பாக பஸ் ஸ்டாப், பெட்ரோல் பங்க் ஆகிய இடங்களில், விபத்து அதிகமாக நடக்கிறது. இவ்வாறு, அவர் பேசினார்.தொடர்ந்து, சீட்பெல்ட் அணிதல் குறித்த, விழிப்புணர்வு வாகன பேரணியை அவர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், பிரேக் இன்ஸ்பெக்டர்கள் தரணிதர், பாலக்கோடு வெங்கிடுசாமி, குலோத்துங்கன், ஓட்டுனர் பயிற்சி உரிமையாளர் சங்க தலைவர் ரபீக்ஜான், மற்றும் ஓட்டுனர்கள் பலர் பங்கேற்றனர்.