| ADDED : மே 22, 2024 06:48 AM
தர்மபுரி : மனைவி மற்றும் மகனை கொல்ல முயன்ற தொழிலாளிக்கு, 7 ஆண்டு சிறை தண்டனை, 10,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.தர்மபுரி மாவட்டம், ஏரியூர் அடுத்த சிக்கனுார்காடு பகுதியை சேர்ந்த கல் உடைக்கும் தொழிலாளி தங்கவேல், 53; இவர் மனைவி விஜயா, 48; இவர்களின் மகன் விஜய், 21; தம்பதிக்குள் கருத்து வேறுபாடால், பூச்சூரிலுள்ள தாய் வீட்டிற்கு விஜயா சென்று விட்டார். கடந்த, 2017 அக்., 3ல் அவரை குடும்பம் நடத்த தங்கவேல் அழைக்க சென்றார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டதில், விஜயாவை அரிவாளால் வெட்டினார். தடுக்க வந்த மகனையும் வெட்டினார். இருவரும் படுகாயமடைந்தனர். ஏரியூர் போலீசார் தங்கவேலை கைது செய்தனர். இந்த வழக்கு, தர்மபுரி விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி சுரேஷ், தங்கவேலுக்கு, 7 ஆண்டு சிறை தண்டனை, 10,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் கல்பனா ஆஜராகினார்.