உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பூ பிடிக்காமல் உள்ள மா மரங்கள்

பூ பிடிக்காமல் உள்ள மா மரங்கள்

போச்சம்பள்ளி; கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 34,000 ஹெக்டேர் பரப்பளவில் விவசாயிகள் 'மா' சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த, 5 ஆண்டுகளாக மாவில் பூச்சி தாக்குதலால், 'மா' விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் மாமரங்களில் பூக்கள் பூக்கத் தொடங்கும். ஆனால் தற்போது, 75 சதவீதம் மாமரங்களில் பூ பூக்காமல் உள்ளதால், விவசாயிகள் விரக்தியில் உள்ளனர். தண்ணீர் பாசனம் பெறும் மீதமுள்ள, 25 சதவீத மாமரங்களில் மட்டும் பூக்கள் பூத்துள்ளன. மானாவாரி நிலங்களில் உள்ள மாமரங்கள் முற்றிலும் பூ பூக்காமல் வெறுமனே காட்சி அளிக்கிறது. இதனால், 'மா' விவசாயிகள் விரக்தியில் உள்ளனர்.இதுகுறித்து, தட்ரஹள்ளியை சேர்ந்த 'மா' விவசாயி சிவகுரு கூறுகையில், ''ஒவ்வொரு ஆண்டும் வேளாண் அதிகாரிகள், 'மா' விவசாயிகளின் மாந்தோட்டத்திற்கு சென்று விளைச்சல் அதிகரிப்பு, பூச்சிகளை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனைகளை வழங்கி வந்தனர். ஆனால் கடந்த, 5 ஆண்டுகளாக யாரும் வருவதில்லை. அப்படியே வந்தாலும் ஒரு சில இடங்களில் நின்று, புகைப்படம் எடுத்து கொண்டு, ஆய்வுக்கு சென்றதாக கணக்கு காட்டி விடுகின்றனர். பூச்சிகளை கட்டுப்படுத்த பூச்சி மருந்து குறித்து, அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்டால், பழைய மருந்துகளையே பரிந்துரைக்கின்றனர். அந்த மருந்துகள் பூச்சிகளை கட்டுப்படுத்துவது இல்லை. பருவநிலை மாற்றம் காரணமாகவும், வேளாண் அதிகாரிகளின் மெத்தன போக்காலும், இந்த ஆண்டு, மா விளைச்சல் பெரிதும் பாதிக்கும்,'' என்றார்.கிருஷ்ணகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் (பொ) செந்தில்குமார் கூறியதாவது:பனி அதிகமாக இருந்தால், வெப்பநிலை குறைந்து, மா மரங்களில் பூக்கள் பூப்பது தாமதமாகும். இம்முறை தாமதமானாலும், பூக்கள் வந்து கொண்டுதான் உள்ளது. நாங்களும் ஒன்றிய அளவில் கண்காணித்து வருகிறோம். மா பூக்கள் தாமதமாகும் மரங்களுக்கு, பொட்டாசியம் நைட்ரேட்டை ஸ்பிரே செய்தால், நன்றாக பூக்கள் பூக்கும். வரும் வாரங்களில் எங்கெல்லாம் மா பூக்கள் குறைவாக உள்ளதோ, அங்கு வேளாண் விஞ்ஞானிகளுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டு அதற்கு ஏற்றவாறு மருந்துகள் பரிந்துரை செய்யப்படும். அந்த மருந்துகளை விவசாயிகள் கடைபிடித்தால், நோய் மற்றும் பூச்சி தாக்குதலில் இருந்து மா மரங்களை காப்பாற்றலாம். மா பூக்கள் பூக்க தாமதத்திற்கு, பனியை தவிர வேறு காரணங்கள் எதுவும் இல்லை. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை