பாலக்கோடு : தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சி பஸ் ஸ்டாண்டில் இருந்து, பல்வேறு பகுதிகளுக்கு தினமும், 200 அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் பாலக்கோடு பஸ் ஸ்டாண்ட் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. பஸ் ஸ்டாண்டிற்கு வரும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், முதியவர்கள், பொதுமக்கள் நிற்பதற்கு கூட இடமில்லாமல் தவிக்கின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் கடந்த சில நாட்களாக தனிநபர்கள் சிலர், 12 கடைகள் கட்டி வருகின்றனர். இது குறித்து, பாலக்கோடு பேரூராட்சி தலைவர் முரளியிடம் கேட்டபோது, ''பஸ் ஸ்டாண்ட் பகுதியில், 1998 ஆண்டு முதல், 25 ஆண்டுகளாக வியாபாரிகள் வைத்திருந்த சிறு கடைகள் அகற்றப்பட்டு பணிகள் நடந்தன. பணிகள் முடிந்த பின், அந்த சிறு கடை உரிமையாளர்களுக்காக, கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மாவட்ட நிர்வாகத்திடம் முறைப்படி தெரிவித்த பின்னர்தான், தற்போது அவர்களாக, முன்வந்து கடைகள் கட்டி வருகின்றனர்,'' என்றார்.இது குறித்து, பேரூராட்சி செயல் அலுவலர் டார்தியிடம் கூறியதாவது:பாலக்கோடு பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கும் பணியின்போது, அங்கிருந்த கடைகளை அப்புறப்படுத்தினோம். பஸ் ஸ்டாண்ட் பணிகள் முடிந்தவுடன், கடைகள் கட்டிக்கொள்ளலாம் என அவர்களிடம் தெரிவித்தோம். அதன்படி அவர்கள் புதிய கடைகளை அவர்களாக கட்டி வருகின்றனர். இதை மற்றவர்கள் பெரிது படுத்துகின்றனர். அவர்கள் வாடகையும் தருவார்கள். இக்கடைகளால், பேரூராட்சிக்கு எந்தவித இழப்பும் இல்லை. இவ்வாறு, அவர் கூறினார்.