தர்மபுரி: வத்தல்மலையிலுள்ள, அங்கன்வாடி கட்டடத்தின் தரையில் காரைகள் பெயர்ந்தும், கூரை உடைந்தும் உள்ளதால், புதிய கட்டடம் கட்டித்தர அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தர்மபுரி ஒன்றியத்துக்கு உட்பட்ட, கொண்டகரஹள்ளி பஞ்.,ல் வத்தல்மலை உள்ளது. இங்கு, ஒன்றியங்காடு பகுதியில், அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இதில், அங்குள்ள மலை கிராமத்தை சேர்ந்த மலைவாழ் மக்களின், 15 குழந்தைகள் உள்ளனர். இந்த, அங்கன்வாடி கட்டடத்தின் சிமென்ட் அட்டையால் கூரை போடப்பட்டிருந்த நிலையில், அட்டைகள் உடைந்துள்ளன. கட்டடத்தின் உள்ளே தரையில், சிமென்ட் காரை பெயர்த்து குழிகளாக உள்ளன. இதில், மாணவர்கள் அவ்வப்போது, தவறி விழுந்து காயமடைகின்றனர். மழை பெய்தால், அங்கன்வாடியில் தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது. இந்த கட்டடம் பெரியூர் செல்லும் சாலையோரத்தில் உள்ளது. இதுவரை, வத்தல்மலை மற்றும் பெரியூருக்கு வந்த, மாவட்ட கலெக்டர், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள், இந்த அங்கன்வாடி கட்டடத்தின் அவலநிலையை கண்டுகொள்ளவில்லை என, அப்பகுதி பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். சேதமடைந்த இந்த அங்கன்வாடி மைய கட்டடத்துக்கு உடனே மாற்று ஏற்பாடு செய்து, புதிய கட்டடம் கட்டிக் கொடுக்க, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.