ஊருக்குள் வராமல் சென்ற தனியார் பஸ் சிறைபிடிப்பு
பாலக்கோடு, தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் இருந்து புலிக்கரை, சோமனஅள்ளி, பாலக்கோடு, வெள்ளிசந்தை, சூடப்பட்டி, பிக்கனஅள்ளி, மல்லுப்படி வழியாக ஓசூர் செல்லும் தனியார் பஸ்கள், சமீப காலமாக அதியமான்கோட்டை -- ஓசூர் புதிய தேசிய நெடுஞ்சாலை வழியாக, ஊருக்குள் வராமல் செல்கின்றன. இதனால் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், பணியாளர்கள், மாணவ, மாணவியர் என அனைத்து தரப்பினரும் பஸ்சுக்கு காத்திருந்து அவதிப்படுகின்றனர்.இதுகுறித்து பல முறை புகார் தெரிவித்தும் பஸ் உரிமையாளர்கள் கண்டு கொள்ளவில்லை. நேற்றிரவு, 8:00 மணிக்கு தர்மபுரியிலிருந்து ஓசூர் நோக்கி சென்ற, 2 தனியார் பஸ்கள் தேசிய நெடுஞ்சாலையில் செல்ல முயன்றது. ஆத்திரமடைந்த பொதுமக்கள் சோமனஅள்ளி ரோடு அருகே பஸ்சை சிறை பிடித்துனர். பாலக்கோடு போலீசார் வந்து பஸ் டிரைவர், கண்டக்டரிடம் அனுமதித்த வழித்தடத்தில் பஸ் இயக்க எச்சரித்ததால், சோமனஅள்ளி வழியாக பஸ் சென்றது. இதனால், ஒரு மணி நேரம் பாலக்கோடு -ஓசூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதித்தது.