ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டம்
பாப்பிரெட்டிப்பட்டி, ஜன. 4---பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியுடன், வெங்கடசமுத்திரம் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் அண்ணாநகர், கோழிமேக்கனுார், திரு.வி.க., நகர், சக்தி நகர், வெங்கடசமுத்திரம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. 12 வார்டுகளில், 2,500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், 9,000 பேர் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியை, பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியுடன் இணைத்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.இதனை திரும்ப பெற வலியுறுத்தியும், வெங்கடசமுத்திரம் ஊராட்சியாகவே இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் வணிகர்கள் கடையடைப்பு நடத்தினர். பொதுமக்கள், 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்யும் பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து, பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டு கோஷம் எழுப்பினர்.பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ.,--- கோவிந்தசாமி, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் விஸ்வநாதன், சேகர், ஊர் தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின் திடீரென அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அரூர் டி.எஸ்.பி., கரிகால் பாரி சங்கர், இன்ஸ்பெக்டர் வான்மதி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின் பி.டி.ஓ.,க்கள் செல்வன், ஜோதிகணேஷ் ஆகியோரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு வழங்கினர். இதை அரசுக்கு அனுப்பி வைப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.