கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கத்தினர் ஸ்டிரைக்கால் முடங்கிய பொது வினியோகம்
பென்னாகரம், பென்னாகரத்தில், தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில், 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த, திங்கட்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு, பென்னாகரம் வட்டார தலைவர் சரவணன் தலைமை வகித்தார். செயலாளர் அசோக் குமார், பொருளாளர் சுதாகர், மாவட்ட இணை செயலாளர் கோவிந்தராஜ், சங்க பொறுப்பாளர் ரகுநாதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பென்னாகரம் தாலுகாவில், 14 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் 114 ரேஷன் கடைகள் உள்ளன. இதில், 150 பேர் பணிபுரிந்து வரும் நிலையில், கடந்த, 2021க்கு பிறகு ஓய்வு பெற்ற பணியாளர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்குதல் மற்றும் கருணை ஓய்வு ஊதித்தை, 5,000 ரூபாயாக ஆக உயர்த்தி வழங்க, வேண்டும். புதியதாக பணியில் சேரும் விற்பனையாளர்களுக்கு கால முறை ஊதியம் வழங்குதல், நியாயவிலை கடைகளில் விற்பனையாளர்களுக்கு பணி பலுவை போக்கும் வகையில் வெளிப்பணி முறையில், எடையாலரை நியமித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும். கணினி பணியாளர்கள் மற்றும் நகை மதிப்பீடாளர்களை பணி நிரந்தரம் செய்தல், புளூடூத் மூலம் மின்னணு எடை தராசு இணைப்பு மற்றும் தாயுமானவர் திட்டத்திலுள்ள இடர்பாடுகளை நிவர்த்தி செய்ய கோருதல் உள்ளிட்ட, 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த, 4 நாட்களாக காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், ரேஷன் கடைகளில் பொதுவினியோகம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.* பாப்பிரெட்டிப்பட்டியிலுள்ள, 184 ரேஷன் கடை பணியாளர்கள் நேற்று, 4வது நாளாக வெங்கடசமுத்திரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் முன், போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்டார செயலாளர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார்.