தே.மு.தி.க.,வை பார்த்து கட்சி துவக்கிய சீமான், விஜய்
அரூர்:''சீமான், விஜய் ஆகியோர் தே.மு.தி.க.,வை பார்த்துதான் கட்சி ஆரம்பித்துள்ளனர்,'' என, அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன் பேசினார்.தே.மு.தி.க.,, 21ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, தர்மபுரி மாவட்டம் அரூர் கச்சேரிமேட்டில், நேற்றிரவு நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:தேர்தல் நேரத்தில் மட்டும் தே.மு.தி.க., அரசியல் செய்வதாக அவதுாறு பரப்புகின்றனர். விஜயகாந்த் ஹிந்தி மொழிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டாலும், அன்னை மொழி காப்போம், அனைத்து மொழி கற்போம் என்றார். தமிழகத்தில் நெசவாளர்களுக்கு தொழில் பாதித்தபோது அனைத்து கட்சிகளும் கஞ்சி ஊற்றினர்.ஆனால், விஜயகாந்த் மட்டும்தான், நெசவாளர்களிடம் காசு கொடுத்து சேலைகளை வாங்கி மக்களுக்கு வழங்கினார். தமிழகத்தில் ஒரே பெண் அரசியல் தலைவர் பிரேமலதா மட்டும் தான். அவருக்கு பெண்கள் முழு ஆதரவு தரவேண்டும். இன்றைக்கு புதிது, புதிதாக கட்சி ஆரம்பிப்பவர்கள், தே.மு.தி.க.,வை பார்த்துதான் கட்சி ஆரம்பிக்கின்றனர். சீமான், விஜய் ஆகியோர் விஜயகாந்த்தை பார்த்துதான் கட்சி ஆரம்பித்துள்ளனர். கடந்த, 2006ல் விஜயகாந்த் சட்டசபைக்கு சென்றது போல், 2026ல் பிரேமலதா சட்டசபைக்கு செல்வார்.இவ்வாறு அவர் பேசினார்.