வீடுகளுக்கு முன் தேங்கிய கழிவுநீர்; தொற்றுநோய் பீதியில் பொதுமக்கள்
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் டவுன் பஞ்., அம்பேத்கர் நகர், 6வது வார்டுக்கு உட்பட்ட ஜெயபால் தெருவில், 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருக்களில் ஓடுவதுடன், வீடுகள் முன் தேங்கியுள்ளது. இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் ஏற்படும் நிலையுள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.ஆர்.முருகம்மாள், ஜெயபால் தெரு, அரூர்: குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்கு சாலை நடுவே குழி தோண்டப்பட்டது. பணிகள் முடிந்து, 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் சாலையை சீரமைக்கவில்லை. இதனால், சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. குப்பையும் அகற்றப்படாமல் உள்ளதால், சுகாதார சீர்கேடு உள்ளது. டவுன் பஞ்., நிர்வாகத்தின் பாராமுகத்தால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, சாலையை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சி.கிருஷ்ணவேணி, ஜெயபால் தெரு, அரூர்: சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் ஆறாக ஓடி, வீடுகளுக்கு முன் குளம் போல் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது. இதனால், கொசு தொல்லையும் அதிகரித்துள்ளதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் நிலையுள்ளது. கழிவு நீர் பிரச்னையால் குடியிருப்பு வாசிகளுக்கிடையே அடிக்கடி வாய்த்தகராறு ஏற்படுகிறது. சிறுவர்கள், வேலைக்கு செல்வோர் என, அனைவரும், தெருவில் தேங்கியுள்ள கழிவு நீரிலேயே நடந்து செல்லும் அவலம் உள்ளது. எனவே, தேங்கிய, கழிவுநீரை அகற்றவும், சாக்கடை கால்வாய் அமைக்கவும், டவுன் பஞ்., நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.