தர்மபுரி, காரிமங்கலம் தி.மு.க., அலுவலகத்தில் எஸ்.ஐ.ஆர்., குறித்த சிறப்பு ஆலோசனை கூட்டம், மேற்கு மாவட்ட செயலர் பழனியப்பன் தலைமையில் நடந்தது. பாலக்கோடு தொகுதி பார்வையாளர் அரியப்பன், ஒன்றிய செயலர்கள் கண்ணபெருமாள், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க., மேற்கு மாவட்ட செயலர் பழனியப்பன் பேசுகையில்,'' வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.,) மூலம், தமிழ்நாட்டில் உள்ள உண்மையான வாக்காளர்களின் பெயர்களை, பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டதாக, தி.மு.க., குற்றம்சாட்டிய நிலையில், நாட்டில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் எஸ்.ஐ.ஆர்.,க்கு தொடக்கம் முதலில் இருந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், தி.மு.க., உட்பட அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தாலும், இந்திய தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர்.,ஐ கொண்டு வந்துள்ளது. வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வாக்காளர்களில் பெரும்பாலானோர், எஸ்.ஐ.ஆர்., படிவங்களை திருப்பி அளிக்க நேரம் கிடைக்காது. இதனால், பெரும் எண்ணிக்கையில் வாக்காளர்கள் நீக்கப்படுவர்.எனவே, தி.மு.க., சார்பில் நியமிக்கப்பட்டுள்ள பி.எல்.ஏ.,2 நிர்வாகிகள் தவறாமல் தங்கள் பகுதி வாக்காளர்களிடம் சென்று, விண்ணப்ப படிவத்தை, அரசு சார்பில் நியமிக்கப்பட்டுள்ள பி.எல்.ஓ.,விடம் ஒப்படைக்க அறிவுறுத்த வேண்டும்,'' என்றார்.