தர்மபுரி : பாலக்கோடு வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில், பெண் யானை மற்றும் உடும்பை கொன்றதாக, 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். இது குறித்து, தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வனச்சரகர் நடராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வனச்சரகம், மொரப்பூர் காப்புக்காடு கரிகுட்டனுாரில் கடந்த, 24ல், பெண் யானை ஒன்று உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடற்கூறாய்வில், யானை துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டது தெரியவந்தது. இது குறித்து வனப்பகுதியில் வனத்துறையினர் சோதனை நடத்தி வந்த நிலையில், ஒரு பாறை பகுதியிலிருந்து, 4 பேர் தப்பியோடினர். அந்த இடத்தை சோதனை செய்தபோது அங்கு, 2 நாட்டு துப்பாக்கி, வெடி மருந்து, சமையல் பொருட்கள் மற்றும் இறந்த நிலையில், 2 உடும்புகள் இருந்தன. வனத்துறையினர் விசாரணையில், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த கொடக்கரை இருளர் காலனியை சேர்ந்த, மாரப்பன், 24, முருகன், 25, கிருஷ்ணன், 22, மாதேஷ், 18, ஆகியோர் உடும்பை நாட்டு துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது தெரியவந்தது. மேலும், பெண் யானையை மாரப்பன் நாட்டு துப்பாக்கியால் சுட்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக, பாலக்கோடு வனச்சரகத்தில், வன உயிரின குற்ற வழக்குப்பதிந்து, 4 பேர் மீதும் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. யானையை சுட்டுக் கொன்றதில், மேலும் சிலர் கைதாக கூடும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.