திருப்பதிக்கு அரசு பஸ் இயக்க வலியுறுத்தல்
பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி மாவட்டம், பொம்மிடி பல்வேறு கிராமங்களின் மைய பகுதியாக திகழ்கிறது. முத்தம்பட்டி, கொண்டகரஹள்ளி, பையர்நத்தம், ஆர்.எம்.நகர், வத்தல்மலை பகுதி மக்கள் தினமும் தங்களுடைய அத்தியாவசிய தேவைகளுக்காக பொம்மிடிக்கு வந்து செல்கின்றனர்.இங்கிருந்து சேலம், சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு பஸ் மற்றும் ரயில் மூலம் சென்று வருகின்றனர். ஆனால் திருப்பதி கோவிலுக்கு செல்லும் மக்கள் பஸ் வசதி இன்றி அவதிப்படுகின்றனர்.கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமானோர் சென்று வருகின்றனர். அவ்வாறு செல்லும் மக்கள் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த சாமியாபுரம் கூட்ரோடு சென்று, அங்கிருந்து வேலுார் செல்கின்றனர்.பின்னர் திருப்பதிக்கு பஸ் பிடித்து செல்ல வேண்டும். இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கோவிலுக்கு செல்வோர் அவதியடைகின்றனர். ஆகவே, கடத்துார், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி சுற்று வட்டார பகுதி மக்கள், பயன் பெறும் வகையில் பொம்மிடியில் இருந்து திருப்பதிக்கு நேரடியாக அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பஸ் கேட்டு மாவட்ட நிர்வாகம் முதல் முதல்வர் தனிப்பிரிவு வரை, இப்பகுதி மக்கள் கோரிக்கை மனு கொடுத்தும் நடவடிக்கையும் இல்லை. ஆகவே அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து பொம்மிடியில் இருந்து திருப்பதிக்கு பஸ் இயக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.