90 ஏரிகளை துார்வாரும் பணி துவக்கம்
தர்மபுரி, உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, தர்மபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில், துாய்மை இயக்கம் நிகழ்ச்சியை, மாவட்ட கலெக்டர் சதீஸ் துவக்கி வைத்தார். பின், அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். இதையடுத்து, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் தளவாய்அள்ளியில், 3 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி மற்றும் தன் விருப்ப நிதியில் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் சார்பில், 30 சிறு பாசன வசதி பெறும் ஏரிகளை புனரமைக்கும் மற்றும் துார்வாரும் பணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம், 60 ஏரிகள் என, மொத்தம், 90 ஏரிகளை துார்வாரும் பணியை கலெக்டர் சதீஸ் துவக்கி வைத்தார். பின், தர்மபுரி நகராட்சி சந்தைபேட்டை பகுதியில் குப்பை பிரித்தெடுக்கும் பணி, நாய்கள் பிடிக்கும் செயல்பாடுகளை பார்வையிட்டார். தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில் தேவையற்ற மின்சாதன பொருட்கள், பழைய செய்திதாள்கள், பழைய காகிதங்கள், பதிவேடுகள், உடைந்த நாற்காலிகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி, சுத்தம் செய்யும் பணியை ஆய்வு செய்தார்.அப்போது, தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., மணி, கூடுதல் கலெக்டர் கேத்தரின் சரண்யா, டி.ஆர்.ஓ., கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, பள்ளப்பட்டியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக, காலை, 8:00 மணிக்கே மரக்கன்றுகள் நடும் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டனர். ஆனால், கலெக்டர் சதீஸ், 10:45 மணிக்கு வந்தார். அதுவரை பெண்கள் வெயிலில் காத்திருந்தனர். அவர்களுக்கு தண்ணீர் கூட வழங்காததால், அவர்கள் சோர்வாக காணப்பட்டனர்.