| ADDED : மே 30, 2024 04:11 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு பொதுத்துறை சார்ந்த அனைத்து செயல்பாடுகளும் கணினி மயமானதால் ஆன்லைன் பதிவு மையத்தை நாடுவோரிடம் கட்டணகொள்ளை அரங்கேறி வருகிறது.மாவட்டத்தில் ஏராளமான ஆன்லைன் பிரவுசிங் மையங்கள் இயங்கி வருகின்றன. போட்டி தேர்வுகள், பட்டா, சிட்டா, பாஸ்போர்ட், வேலை வாய்ப்பு, ஆதார், பான்கார்டு, தொழிலாளர் அட்டை, கல்வி உதவி தொகை, ஓய்வூதிய விபர பதிவுகள், பஸ், ரயில், விமான முன்பதிவு , தகவல் பெறும் உரிமை சட்ட செயல்பாடுகள் உட்பட மத்திய, மாநில அரசு துறை சார்ந்த அனைத்து பதிவு செயல்பாடுகளும் கணினி வாயிலாகவே நடைபெறுகிறது. நகரத்தில் வசிக்கும் பெரும்பாலானோர் கையில் தவழும் அலைபேசியின் வாயிலாக அந்தந்த செயலிகளை நிறுவி ஆன்லைன் பதிவு தேவையை பூர்த்தி செய்கின்றனர்.கணினி அறிமுகமற்ற ,ஆன்ட்ராய்டு அலைபேசி இல்லாத பலர் சட்ட ரீதியான பதிவு முறைக்காக ஆன்லைன் பிரசிங் மையத்தை நாடுகின்றனர். அப்படி வருபவர்களிடம் பிரவுசிங் மையங்கள் வசூலிக்கப்படும் தொகையானது இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. இதனால் பல இடங்களில் கட்டணகொள்ளை வெளிப்படையாகவே தெரியும் நிலை உள்ளது. போட்டி தேர்வுகளுக்கான விண்ணப்ப கட்டணத்தை கணினி வாயிலாகவே செலுத்துவதால் அந்த தொகையோடு ஆன்லைன் பிரவுசிங் தொகையையும் சேர்த்து வசூல் செய்யும் நிலை உள்ளது. இதே பாணியில் மற்ற ஆன்லைன் இலவச பதிவு முறைக்கும் கூட பணம் கூடுதலாக செலவாகும் என பலர் நினைக்கும் போக்கும் தொடர்கிறது.. ஆன்லைன் பதிவு முறைகளுக்கு உரிய கட்டண விபரத்தை அனைத்து பிரவுசிங் மையங்களிலும் பட்டியலிட வேண்டும். ...............கல்வி வியாபாரமாகி விடகூடாது ஆன்லைன் விண்ணப்ப பதிவு முறை கட்டணத்திற்கு வரைமுறை நிர்ணயம் செய்ய வேண்டும். அதற்கான கட்டண விகிதத்தை பட்டியலிட்டு பொதுமக்கள் பார்வைக்கு படும்படி வைத்து ஆன்லைன் பிரவுசிங் மையங்கள் செயல்பட வேண்டும். பல இடங்களில் கணினி மெதுவாக செயல்படுவதாக கூறி பாமரர்களிடம் கட்டணத்தை அதிகப்படுத்தி வசூலிக்கும் போக்கு தொடர்கிறது.ஆன்லைன் பிரவுசிங் மையங்கள் சேவை மையமாக செயல்பட வேண்டுமே தவிர கல்வி வியாபார கூடாரமாகி விடக்கூடாது. பல இடங்களில் இதுபற்றிய சர்ச்சைகள் எழுகின்றன. மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு ஆன்லைன் விண்ணப்ப கட்டண முறையை செயல்படுத்த வேண்டும்.பெரியநாயகம் தினகரன், விவசாயி, சிறுமலை புதுார்....................