-சின்னாளபட்டி பஸ் ஸ்டாண்ட் மேம்பாட்டு பணியில் தொய்வு
சின்னாளபட்டி : சின்னாளபட்டி பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகளில் 16 மாதங்களாக தொய்வு நீடிப்பதால் திறந்தவெளி, விபத்து அபாய சூழலில் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.சின்னாளபட்டி பேரூராட்சியில் பஸ் ஸ்டாண்ட் மேம்பாட்டுக்காக ரூ. 2 கோடியே 43 லட்சம் மதிப்பில் பஸ்கள் நிறுத்துவதற்கான தனி பிளாட்பாரம், பயணிகள் தங்குமிடம், வணிக வளாகங்கள், கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன் திட்ட முன் வடிவு தயாரிக்கப்பட்டது. உள்ளூர் திட்டக்குழு அனுமதி பெறாமல் அவசர கோலத்தில் 2023 செப்டம்பரில் பூமி பூஜையுடன் பணிகள் துவங்கின. முந்தைய கட்டடங்களை அகற்றும் பணியில் 8 லட்ச ரூபாயில் புதுப்பிக்கப்பட்ட கழிப்பறை கட்டடத்தை பயன்பாட்டிற்கு வராமலே இடித்து அகற்றினர்.அகற்றப்பட்ட மரங்கள், கற்கள் போன்றவற்றை அப்புறப்படுத்துவதில் முறைகேடு புகார் எழுந்தது. போதிய அடிப்படை வசதிகளின்றி சில வாரங்கள் மட்டுமே கோட்டைமந்தை பகுதி தற்காலிக பஸ் ஸ்டாண்டாக செயல்பட்டது. பயணிகள் குடிநீர், கழிப்பறை வசதிக்காக அவதிப்பட்டனர். அடுத்த சில நாட்களில் பணிகள் முடிக்கப்படாமலே மீண்டும் பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. குடிநீர், தெருவிளக்கு, சுகாதாரம் சார்ந்த பிரச்னைகள் தற்போதும் உள்ளன. பயணிகள் திறந்த வெளியில் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். குறுக்கும் நெடுக்குமாக நிறுத்தப்படும் பஸ்களால் பயணிகள் விபத்துக்குள்ளாகும் அவலமும் தொடர்கிறது. 6 மாத அவகாசத்தில் துவங்கிய மேம்பாட்டு பணி 16 மாதங்களாகியும் முடியவில்லை. பயணிகளின் திறந்த வெளி, விபத்து அபாய பிரச்னைகளை களையும் நடவடிக்கையில் பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியமும் நீடிக்கிறது. ஆமை வேக பணி
சுந்தரம்,ஓய்வு பெற்ற மின்ஊழியர், காந்திகிராமம்: தினமும் 50-க்கு மேற்பட்ட பஸ்கள் சென்று வருகின்றன. விரிவாக்க பணிகள் முடியும் முன்பே பஸ் ஸ்டாண்டை திறந்து விட்டனர். இருப்பினும் அடிப்படை வசதிகளை பெயரளவில் கூட பராமரிக்கவில்லை. பஸ்கள் நிறுத்துவதற்கான இட ஒதுக்கீடு வசதி இல்லை. குறுக்கும் நெடுக்குமாக விரும்பிய இடங்களில் நிறுத்தி கொள்கின்றனர். வெளிநபர்களின் வாகனங்கள், கண்ட இடங்களில் நிறுத்துகின்றனர். கட்டுமான பணிக்கான தளவாட பொருட்கள் ஆங்காங்கு குவித்துள்ளனர். பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி இல்லை. கழிப்பறை வசதி இன்றி பயணிகள் அவதிக்குள்ளாகும் அவலம் பல மாதங்களாக தொடர்கிறது. முறையான திட்டமிடலின்றி பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது. நடவடிக்கை தேவை
பூங்காவனம்,பா.ஜ., மாவட்ட மகளிர் அணி, சின்னாளபட்டி : பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணிக்காக இங்கு இருந்த 8 லட்ச ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு கழிப்பறை கட்டடத்தை திறக்காமல் இடித்து அகற்றினர். அரசு பணத்தை வீணாக்குவதை அலட்சியமாக செயல்படுத்தினர். இப்பகுதியில் இருந்து அகற்றப்பட்ட மரங்கள், கற்கள், தளவாட பொருட்களை முறையாக ஏலம் விட்டு அப்புறப்படுத்தவில்லை. விரிவாக்க திட்ட பணிகளில் ஏராளமான முறைகேடுகள் அரங்கேறி வருகின்றன. புகார் எழுந்தபோதும், சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் மீது உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. காத்திருக்கும் பயணிகளுக்கு குடிநீர், தெருவிளக்கு வசதிகளும் இல்லை. நிழற்குடை வசதி இல்லாத சூழலில் திறந்த வெளியில் வெயில், மழைக்காலங்களில் பயணிகள் சிரமப்படுகின்றனர். ---சுகாதாரக்கேடு
சித்திரவேலு ,தனியார் நிறுவன ஊழியர், முருகன்பட்டி : சின்னாளபட்டி பிரிவு வழியே செல்லும் பள்ளபட்டி, கொடைரோடு, நிலக்கோட்டை அரசு டவுன் பஸ்கள் அனைத்தும் சின்னாளபட்டி பஸ் ஸ்டாண்ட் வரை இயக்கப்பட்டன. தற்போது இவை சின்னாளபட்டி உள்ளே செல்வதில்லை. கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளிகள் பாதிப்படைந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன் அவசர கோலத்தில் மீண்டும் பஸ் ஸ்டாண்ட் திறந்து விடப்பட்டது.இங்கும் அடிப்படை வசதிகள் ஏதுமில்லை. பஸ் ஸ்டாண்டிற்கு வரும் மகளிர் மட்டுமன்றி குழந்தைகள் , முதியோர் தவிக்கின்றனர். பயணிகள் புளிய மரத்தின் மறைவை திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர்.