உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கரூர் சாலை வேடசந்துார் பிரிவில் மேம்பாலம் இன்றி விபத்துக்கள்

கரூர் சாலை வேடசந்துார் பிரிவில் மேம்பாலம் இன்றி விபத்துக்கள்

வேடசந்தூர்: திண்டுக்கல் கரூர் நெடுஞ்சாலையில் வேடசந்துார் பிரிவு அருகே மேம்பாலம் இல்லாததால் தொடர் விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன.திண்டுக்கல் கரூர் நெடுஞ்சாலை இருவழி சாலையாக இருந்த நிலையில் 15 ஆண்டுகளுக்கு முன்பு4 வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்டது. 4 வழி சாலை அமைக்கப்பட்ட புதிதில் ஆங்காங்கே விபத்து , உயிரிழப்பு தொடர்கதையாக இருந்தன. காலப்போக்கில் போதிய விழிப்புணர்வு ஏற்பட தற்போது விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது . இருந்தாலும் திண்டுக்கல் கரூர் ரோட்டில் காக்கா தோப்பு பிரிவு அருகே வேடசந்துாருக்கு ரோடு பிரிந்து செல்கிறது. இந்த இடத்தில் மேம்பாலம் அமைக்காததால் விபத்து , உயிரிழப்புக்கள் தொடர்கின்றன. இந்த இடத்தில் மேம்பாலம் அமைத்தால் ரோட்டை கடந்து செல்லும் வாகனங்கள் எளிதாக செல்லும். தற்போது எந்த நேரம் என்ன நடக்குமோ என்ற அச்சத்திலே வாகன ஓட்டிகள் ரோட்டை கடந்து செல்கின்றனர்.பொதுமக்கள் , வாகன ஓட்டிகளின் நலன் கருதி இந்த இடத்தில் மேம்பாலம் அமைக்க நெடுஞ்சாலை துறை நிர்வாகம் முன் வர வேண்டும்.

பாதுகாப்பு அவசியம்

பி.சதீஷ்குமார், சமூக ஆர்வலர் : நான்கு வழி சாலை அமைக்கப்பட்ட பிறகு தொடர் விபத்து , உயிரிழப்புகள் நடைபெற்று வருகின்றன. கரூர் காவிரி ஆற்று பாலத்தில் வாகனங்களில் வேகம் கருதி ரோட்டின் இருபுறமும் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த இடத்தில் மேம்பாலம் அமைப்பது அவசிய தேவையாக உள்ளது. மேம்பாலம் அமைக்கும் வரை போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் முன் வர வேண்டும்.

ஒன்றில் ஓகே...மற்றொன்றில் தேவை

எம்.சுரேஷ், தி.மு.க., முன்னாள் ஊராட்சி செயலர் : தொடர் விபத்து தடுக்க கரூரில் இருந்து வேடசந்துாருக்குள் பிரிந்து செல்லும் இடத்தில் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு விட்டது. இதே போல் திண்டுக்கல்லில் இருந்து வரும் நெடுஞ்சாலையில் வேடசந்துார் பிரிவு அருகே மேம்பாலம் கட்டினால் மக்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வர்.

சுற்றும் வாகனங்கள்

டி.ராமசாமி, குடகனாறு பாதுகாப்பு சங்கத் தலைவர்: காக்கா தோப்பு பிரிவு அருகே மேம்பாலம் விரைந்து கட்ட வேண்டும். சர்வீஸ் ரோடு முறையாக இல்லாததால் ஒட்டன்சத்திரம் செல்லும் வாகனங்கள் வேடசந்துார் நகர் பகுதியை சுற்றி செல்கின்றன. வேடசந்துார் கரூர் ரோட்டிலும் முறையான சர்வீஸ் ரோடுகள் இல்லை. காக்கா தோப்பு பிரிவு அருகே மேம்பாலம் இல்லாதது ,ஒட்டன்சத்திரம் பிரிவு ரோட்டில் செல்ல சப்வே அமைக்காததும் ஒரு குறையாகவே உள்ளது. நெடுஞ்சாலைத் துறை நிர்வாகம் இப்பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ