உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வயசு ஏறுது... வயிறு எரியுது... எட்டு வருஷமா ஏழரை தீரலை; பட்டா பிரச்னையால் படு டென்ஷனில் கழுவி ஊத்திய முதியவர்

வயசு ஏறுது... வயிறு எரியுது... எட்டு வருஷமா ஏழரை தீரலை; பட்டா பிரச்னையால் படு டென்ஷனில் கழுவி ஊத்திய முதியவர்

திண்டுக்கல் : போலி பட்டா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 8 ஆண்டுகளாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கடுமையாக விமர்சித்த முதியவர், ''மனு கொடுத்தா மனுவ காணோம் என்கிறார்கள். சி.ஏ., படிச்ச முட்டாள் நான். கேடு கெட்ட நிர்வாகத்தை நம்பி 8 வருஷமா மனுகொடுத்து அலுத்து போனேன்,'' என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பகுதியை சேர்ந்தவர் முருகன் 60. இவரது சகோதரர் சீனிவாசன் வீட்டை போலி ஆவணங்கள் மூலமாக இடித்த அதே பகுதியை சேர்ந்தவர் மீதும் அவருக்கு துணை போன அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி 2016 ல் தாசில்தார் அலுவலகத்தில் மனு அளித்தார். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது குறித்து எரியோடு தாசில்தார் அலுவலகத்தில் விசாரித்தார். மனுவை காணவில்லை என கூறினர். ஆண்டுகள் பல கடந்ததால் மன உளைச்சலுக்கு ஆளான முருகன் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தார்.குறை தீர் கூட்டத்தில் மனு கொடுக்கும் இடத்தில் வரிசையில் நின்ற அவர் அரசு அதிகாரிகள் மீது கடுமையாக குற்றம் சாட்டி உரத்த குரலில் ஆவேசமாக கத்தினார்.''எத்தனை வருஷமா மனு கொடுக்குறது... 8 வருஷமா போராடிகிட்டு இருக்கேன். அதிகாரிகள் நிர்வாகம் செய்வது சரியில்லை. எங்களை துாக்கில் போடுங்கள். நீங்களெல்லாம் எங்களுடனேயே இருந்து, வாழ்ந்துகிட்டு ஒன்னும் செய்யல. சுதந்திரத்திற்காக உயிரை விட்டவன் எல்லாம் எங்கே போறது. திருட்டு பத்திரத்திற்கு மனு கொடுத்தவனுக்கு உடனடியாக பதில் கிடைக்கிறது. 8 வருஷமாக போராடுறேன். என்னுடைய படிப்பு, வாழ்க்கை எல்லாமே போய்விட்டது. ஒவ்வொரு அதிகாரிக்கும் 150 முறைக்கு மேல் மெயில் அனுப்பியிருக்கிறேன். யாரும் செவி சாய்க்கல. நான் படித்தது எதற்காக. சீ... கேவலம். படித்துதான் வேலைக்கு வந்திருக்கிறீர்களா... என் வயிறு எரியுது. என் துாக்கம் போச்சு. 30 வருட படிப்பு போச்சு. தெருத் தெருவாய் அலைஞ்சி, 10 ரூபாய் சம்பாரிச்சு படிச்சேன். ஊழல் பெருத்துப்போச்சு. அதிகாரிகளே என்னை துாக்கில் போடுங்க. எல்லா இடங்களிலும் பொய்தான். தமிழகத்தில் நிர்வாகம் சரியில்லை. அரசியல்வாதியை குறை சொல்ல மாட்டேன். அதிகாரிகள் தான் நிர்வாகம் செய்கிறீர்கள். மனு கொடுத்தா மனுவ காணோம் என்கிறார்கள். உங்களின் காலை கழுவி குடிக்க வேண்டுமா. இனிமேல் ஆபீசுக்கு வராதீங்கனு சொல்லுங்க. இல்லனா பணக்கட்டோட வாங்கனு சொல்லுங்க. சி.ஏ., படிச்ச முட்டாள் நான். மோசமான நிர்வாகத்தை நம்பி 8 வருஷமா மனுகொடுத்து அலுத்து போனேன். பூராம் பொய். ↔தொடர்ச்சி 7ம் பக்கம்பூராம் நாடகம். இங்க அதிகாரிகள் மோசம்,'' என்றார்.முருகன் உரத்த குரலில் பேசியபோது மனு கொடுக்க வந்த சிலரும் அவருக்கு ஆதரவாக பேசினர். முருகன் சத்தமிட்டபோது பெண் போலீஸ் தடுக்க முயற்சித்தார்.மற்ற போலீசார் முருகனை தனித்துணை கலெக்டர் கங்காதேவியிடம் அழைத்து சென்றனர். அப்போதும் அவர் ஆவேச குரலில் தனது குறைகளை கூறி கொண்டிருந்தார்.முருகனின் ஆவேச பேச்சு குறித்து அவரிடம் கேட்டபோது, எனது சகோதரர் சீனிவாசன் 7 ம் வகுப்பு வரை படித்துள்ளார். அவர் 2012ல் ஒரு சென்ட் இடம் எரியோடு பகுதியில் வாங்கினார். ஆனால் அதை போலி பத்திரங்கள் மூலம் அபகரிக்கும் நோக்கோடு அப்பகுதியில் உள்ள வீட்டையும் ஒருவர் இடித்துள்ளார். இதுகுறித்து மின்வாரியம், வருவாய்த்துறை, நில அளவை துறை, காவல்துறை, முதல்வர் தனிப்பிரிவு, உங்கள் ஊரில் உங்களைத் தேடி, இமெயில் மூலமாகவும் இதுவரை 141 மனுக்கள் அனுப்பி உள்ளேன். கடைசியாக ஆர் .டி. ஓ., வை கேட்டபோது அனுப்பிய மனுவை காணவில்லை என பதில் கூறுகிறார். நீதிமன்றத்திற்கு செல்வதற்காக, கடைசியாக கலெக்டர் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து மனு அளிக்க வந்து பார்த்த போது தான் படிக்கத் தெரியாத பலர் இது போன்ற பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிந்தேன் . அதனால்தான் ஆவேசமடைந்து பேசினேன்.தற்போது மீண்டும் ஆர்.டி.ஓ., விசாரிப்பதாக தெரிவித்தனர். அதில் எனக்கு உடன்பாடு இல்லை என தெரிவித்ததன் அடிப்படையில், கலெக்டர் விசாரிப்பார் என தெரிவித்துள்ளனர். என்ன நடக்கிறது என பார்ப்போம் என்றார்.

ஒரே நாளில் 5 பேர் தீக்குளிக்க முயற்சி

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பழைய கன்னிவாடி பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி காளியப்பன் 48, டீசலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். போலீசார் அவர் மீது தண்ணீரை ஊற்றி தடுத்தனர். அவர் கூறுகையில், எனது பூர்வீக நிலத்தை அளவீடு செய்து தரும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை விண்ணப்பித்தும் நடவடிக்கை எடுக்காததால் தீக்குளிக்க முயன்றேன் என தெரிவித்தார்.இது நடந்த சில நிமிடங்களில் திண்டுக்கல் கொசவப்பட்டியை சேர்ந்த அருள் ஆனந்தம் பாஸ்கர் 48, உறவினர் ஜேசுதாஸ் 55, தம்பி சவரிமுத்து 50 , மண்ணென்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களும் போலீசாரால் மீட்கப்பட்டனர். இவர்களுக்கு சொந்தமான நிலத்தை ஒருவர் ஆக்கிரமித்து கொலை மிரட்டல் விடுத்ததால் தற்கொலைக்கு முயன்றது தெரிந்தது.இதை தொடர்ந்து சிலுவத்துாரையைடுத்த காட்டுப்பட்டியை சேர்ந்த செல்வமுருகன் 50, தனது விவசாய நிலத்தை சிலர் ஆக்கிரமிக்க முயல்வதுடன், மனைவி, குழந்தைகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர் எனக்கூறி உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரையும் போலீசார் தடுத்தனர். தீக்குளிக்க முயன்ற 5 பேரையும் விசாரணைக்காக தாடிக்கொம்பு போலீசார் அழைத்துச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

சம்பர
டிச 25, 2024 06:54

எந்த கொம்பனும் முதல்வா இத படி


rama adhavan
டிச 25, 2024 00:28

படு பாவிகள். நரகத்தில் நாறுவார்கள்.


Raghavan
டிச 24, 2024 21:01

அதிகாரிகள் சொல்லுவதை எந்த அரசியல்வாதி கேட்கிறன்றனர். அரசியல்வாதி சொல்வதை அதிகாரிகள் செய்யாமல் இருந்தால் உடனே அவர்களை மாற்றி விடுவார்கள் அல்லது உதவாக்கரை போஸ்டிங் போடுவார்கள். ஏதோ சொன்னார் என்பதற்காக நிதி அமைச்சரை உடனே வேறு ஒரு டம்மி துறைக்கு மாற்றி விட்டார்கள். அமைச்சருக்கே இந்த பாடு என்றால் அதிகாரிகளுக்கு கேட்கவே வேண்டாம்.


நிக்கோல்தாம்சன்
டிச 24, 2024 20:36

திராவிடம் என்னும் பெயரில் கோட்டாவை கொண்டு வந்த கழகங்கள் என்ன செய்ய போகின்றன , அதிகாரிகளை கூண்டோடு வீட்டுக்கு அனுப்பும் தைரியம் இருக்கா ?


V வைகுண்டேஸ்வரன் , chennai
டிச 24, 2024 09:24

பாவம். பேசாமல் எதேனும் ஒரு மாடல் கட்சியில் சேர்ந்து இருந்த இருக்கலாம். சி ஏ படித்து காலத்தை வீணடித்து விட்டதன் பலன்...ஹூம்


Gokul Krishnan
டிச 24, 2024 15:57

ஆட்சிக்கு வருவதற்கு முன் சிஎம் செல்லுக்கு மனு டீ அளித்தால் நூறு நாட்களில் தீர்வு என்று ஒருத்தர் சொன்னார் அவரை பார்த்தீர்களா


karthik
டிச 24, 2024 08:57

இவ்வளவும் பேசிவிட்டு.. அரசியல்வியாதிகளை குறை சொல்ல மாட்டேன் என்று சொன்னீர்கள் பார்த்தீர்களா அங்க தான் அனைத்து தவறும் தொடங்குகிறது.. ஒவ்வொரு உயர் அதிகாரிகளும் ஒரு அரசுயல்வியாதி பின்னாடி தான் ஒளிந்துகொண்டு இருக்கிறான் என்பதை மறந்துவிடுகிறீர்கள் அல்லது அறியாமையில் இருக்கிறீர்கள்.


சமீபத்திய செய்தி