உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பிளாஸ்டிக் இல்லா திண்டுக்கல்லை உருவாக்கும் சுற்றுச்சூழல் கழகம்

பிளாஸ்டிக் இல்லா திண்டுக்கல்லை உருவாக்கும் சுற்றுச்சூழல் கழகம்

பள்ளிகள்,பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மஞ்சள் பைகளை வழங்குவது,ரோட்டோரங்கள்,குளக்கரைகளில் மரக்கன்றுகளை நடவு செய்வது உள்ளிட்ட பல்வேறு செயல்களில் ஈடுபட்டு திண்டுக்கல் சுற்று வட்டார பகுதிகளை பிளாஸ்டிக் பயன்பாடில்லாமல் மாற்றுவதற்கு முயற்சி எடுக்கின்றனர் சுற்றுச்சூழல் கழகத்தினர்.சுற்றுச்சூழல் கழகம் அமைப்பு ஜி.டி.என்.கல்லுாரியில் மாணவர்கள்,பேராசிரியர்களை கொண்டு 2017 ல் துவங்கப்பட்டது. இந்த அமைப்பினர் திண்டுக்கல் நகர்,புறநகர் பகுதிகளுக்கு சென்று பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். அதுமட்டுமில்லாமல் பூமார்க்கெட், காய்கறி மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட், பள்ளிகளுக்கு சென்று அங்கிருக்கும் பொது மக்களிடம் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மனித சமூகத்திற்கு எவ்வளவு பாதிப்புகள் வருகிறது என்பது குறித்து வீதி நாடகங்கள்,நடனங்கள் மூலம் விளக்கம் கொடுக்கின்றனர். பிளாஸ்டிக்காமல் ஏற்படும் தீமைகள் என்னென்ன என்பது குறித்த வாசகங்களை துண்டு பிரசுரங்களில் அச்சடித்து மக்களிடம் வழங்குகின்றனர். இவர்கள் பள்ளிகள்,கல்லுாரிகளை அதிகளவில் தேர்வு செய்து மாணவர்கள் மத்தியில் தங்கள் கொள்கைகளை பரப்புவதில் ஆர்வம் காட்டுகின்றனர். மாணவர்கள் தான் எதிர்கால சந்ததியினர் என்பதை உணர்ந்து அவர்களிடமிருந்து படிப்படியாக வீடுகள் தோறும் பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகளை பரப்புகின்றனர். மஞ்சள் பைகளை ரயில்வே ஸ்டேஷன்,பஸ் ஸ்டாண்டிலிருக்கும் பயணிகளிடம் வழங்கி பிளாஸ்டிக் பயன்பாடை தடுக்க வலியுறுத்துகின்றனர். மக்கள் தற்போது மக்கும்,மக்காத குப்பையை தரம்பிரித்து உள்ளாட்சிகளிடம் வழங்கும் அளவிற்கு உயர்ந்திருப்பதே பெருமிதமாக இவர்கள் கருதுகின்றனர். சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காகவே ரோட்டோரங்கள்,குளக்கரைகளில் அதிகளவில் மரக்கன்றுகளையும் இவர்கள் நடவு செய்து பராமரிக்கவும் செய்கின்றனர்.

குழந்தைகளுக்கு கற்று கொடுங்கள்

ரவிச்சந்திரன்,சுற்றுச்சூழல் கழக ஒருங்கிணைப்பாளர்,திண்டுக்கல்: ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தான் இருப்பதிலேயே மிகவும் கொடுமையானது. அதை மக்கள் பயன்படுத்திவிட்டு ரோட்டோரங்களில் விட்டு செல்வதால் அது மண்ணில் புதைந்து மக்காமல் மண் வளத்தை கெடுக்கிறது. இதுதவிர ரோட்டோரங்களில் உணவு தேடியும் திரியும் கால்நடைகள் பசியால் பிளாஸ்டிக் பொருட்களை உண்டு உடல்நலம் பாதிக்கப்படுகின்றன. எங்கள் அமைப்பு மூலம் முழுமையாக திண்டுக்கல் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாடுகளை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். படிப்படியாக முன்னேற்றம் அடைந்து வருகிறோம். பொது மக்கள் வீடுகளிலிருந்து கடைகளுக்கு செல்லும் போது வீட்டிலிருந்து துணி பைகள்,பாத்திரங்களை எடுத்து செல்லுங்கள். குழந்தைகளுக்கும் பிளாஸ்டிக் பயன்பாடுகளை தடுக்க கற்றுகொடுங்கள்.

பொது இடங்களில் விழிப்புணர்வு

அருண்,சுற்றுச்சூழல் கழக உதவி ஒருங்கிணைப்பாளர்,திண்டுக்கல்: பிளாஸ்டிக் பயன்பாடை தடுப்பது எல்லாரும் நினைத்தால் மட்டுமே சாத்தியம். அதற்காக தான் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி,கல்லுாரிகளுக்கு செல்கிறோம். ரயில்வே ஸ்டேஷன்,பஸ் ஸ்டாண்ட் போன்ற பொது இடங்களில் மஞ்சள் பைகள்,துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். கண்டிப்பாக திண்டுக்கல் முழுவதும் வருங்காலத்தில் பிளாஸ்டிக் இல்லாமல் இருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ