குஜிலியம்பாறை, : பாளையத்தின் மையப்பகுதியில் செல்லும் புங்காற்றின் குறுக்கே வாரச்சந்தை அருகே கட்டப்பட்டிருந்த தடுப்பணை காவிரி குடிநீர் குழாய் பதிப்பதற்காக உடைக்கப்பட்டது. இதனால் கடும் குடிநீர் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளதோடு தடுப்பு அணையை புதுப்பிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.பாளையம் பேரூராட்சி பாளையத்தின் மையப்பகுதியில் புங்காறு ( பாளையம் ஆறு ) செல்கிறது. இந்த ஆறு ராமகிரி மலைப்பகுதியில் உருவாகி குஜிலியம்பாறை, பாளையம் வெள்ளியணை வழியாக கரூர் நோக்கி செல்கிறது. இந்த பாளையம் ஆற்றில் பாளையம் வாரச்சந்தை அருகே 1986 ல் தடுப்பணை கட்டப்பட்டது. தடுப்பணை கட்டிய பிறகுதான் பாளையம் நகர் பகுதியில் உள்ள கிணறுகள்,போர்வெல்களில் போதிய குடிநீர் ஆதாரம் கிடைத்தது . இப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வந்த தடுப்பணை , காவிரி குடிநீர் குழாய் அமைக்கப்பட்ட போது உடைக்கப்பட்டது. இதோடு ஆற்றுப்பகுதி காவிரி குடிநீர் குழாய் பதிப்பதற்காக பறித்து போட்டுள்ளதால் மேடு பள்ளங்களாக உள்ளது. மழைக்காலத்தில் தண்ணீர் வந்தாலும் அருகில் உள்ள சந்தை வளாகத்திற்குள் மழைநீர் செல்லும் அபாயம் உள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. புதுப்பித்து தாருங்க
ஏ.ராஜரத்தினம், மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர், குஜிலியம்பாறை:தடுப்பணை 1986 ல் கட்டப்பட்டது. இதனால் சுற்றுப்பகுதி மட்டுமின்றி 10-க்கு மேற்பட்ட விவசாய கிணறுகளுக்கும் போதிய குடிநீர் ஆதாரம் கிடைக்கிறது. காவிரி குடிநீர் குழாயை மாற்றியமைக்கும் போது தடுப்பணையை உடைத்து முழுவதுமாக சேதப்படுத்தி விட்டனர். வறட்சி காலங்களில் கடும் குடிநீர் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. பொது மக்களின் நலன் கருதி தடுப்பணையை மீண்டும் புதுப்பித்து தர மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும் . குடிநீர் பிரச்னைக்கு வாய்ப்பு
எம்.சுப்பிரமணி, விவசாயி, கோட்டநத்தம்: தடுப்பணை அமைக்கப்பட்ட பிறகு தான் குடிநீர் பிரச்னை தீர்ந்தது. தற்போது தடுப்பணை உடைக்கப்பட்டுள்ளதால் மீண்டும் கடும் குடிநீர் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. பைப் லைனை மாற்றி அமைப்பதற்காக ஒரு தடுப்பணையை வீணடித்து விட்டனர். மக்களின் நலன் கருதி தடுப்பணையை மீண்டும் புதுப்பிக்கவும், ஆற்றுப்பகுதியை முறையாக துார்வாரி கரையை பலப்படுத்தவும் முன் வர வேண்டும். வீணடித்து விட்டனர்
எஸ்.ஆறுமுகம் சமூக ஆர்வலர், பாளையம்: காவிரி குடிநீர் குழாய் பாளையம் கடைவீதி வழியாக சென்ற நிலையில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டது. இதனால் குழாய் பாதையை மாற்றி அமைக்கும் நோக்கில் தடுப்பணையை வீணடித்து விட்டனர். அதுமட்டுமன்றி ஆற்றுப்பகுதி மேடு, பள்ளங்களாக உள்ளது. மழைக்காலங்களில் தண்ணீர் வரும் பட்சத்தில் மழைநீர் சந்தை வளாகத்திற்குள் புகும் நிலையால் சந்தையின் சுற்றுச்சுவரையும் சேதப்படுத்தி விட்டனர். தடுப்பணையை மீண்டும் கட்டுவதோடு ஆற்றின் கிழக்குப் பகுதியில் தடுப்பு சுவர் அமைத்து ஆற்றை துார் வரவேண்டும். ஆற்றுப்பகுதியில் கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவதையும் நிர்வாகம் தடை செய்ய வேண்டும் என்றார்.