கொடை அண்ணா சாலையில் தொடரும் நெரிசல்
கொடைக்கானல் : கொடைக்கானல் அண்ணா சாலையில் தொடரும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர்.சுற்றுலாத்தலமான கொடைக்கானலுக்கு நாள்தோறும் ஏராளமான பயணிகள் வருகின்றனர். நகரின் பிஸியான பகுதியாக இருப்பது அண்ணாசாலையாகும். இந்த ரோட்டில் பஸ் ஸ்டாண்ட், வணிக நிறுவனங்கள், வங்கிகள், உணவகங்கள் உள்ளன. நகரில் ஜனரஞ்சகமான இந்த ரோட்டில் நாள்தோறும் ரோட்டோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு கார் பார்க்கிங் வசதியின்றி ரோட்டோரத்தை பயன்படுத்துகின்றனர்.ஒருவழிப்பாதையான இந்த ரோட்டில் எதிரே வாகனங்கள் செல்ல அனுமதி இல்லாத நிலையில் போக்குவரத்து விதிமுறைகளுடன் வாகனங்கள் செல்கின்றன. இதை கண்காணிக்க போலீஸ் அவுட் போஸ்ட் சிக்னல் அமைக்கப்பட்ட போதும் வாகன நிறுத்தத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது.தொடரும் போக்குவரத்து நெரிசலால் நாள்தோறும் பஸ், சுற்றுலா வாகனங்கள் எளிதில் சென்றுவர முடியாத நிலை ஏற்படுகிறது. அண்ணா சாலையில் உள்ள போக்குவரத்து நெரிலை தவிர்க்க போலீசார், நகராட்சி நிர்வாகம் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.