உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குடியிருப்பில் காட்டேஜ்கள்; காட்டுமாடு, நாய்களால் அவதி கொதிக்கும் கொடைக்கானல் 9 வது வார்டு மக்கள்

குடியிருப்பில் காட்டேஜ்கள்; காட்டுமாடு, நாய்களால் அவதி கொதிக்கும் கொடைக்கானல் 9 வது வார்டு மக்கள்

கொடைக்கானல்: பாம்பார் அருவி, அப்பர் லேக் வியூ, வி.ஜி.பி., உள்ளிட் பகுதிகளை உள்ளடக்கிய கொடைக்கானல் நகராட்சி 9வது வார்டில் காட்டுமாடு, காட்டுப்பன்றிகளின் அட்டூழியம், கண்காணிப்பு கேமரா இல்லாத நிலை, குடியிருப்புகளில் செயல்படும் காட்டேஜ்களால் அவதி,அதிவேகமாக செல்லும் டூவீலர்களால் விபத்து அபாயம் என ஏராளமான பிரச்னைகள் குவிந்துள்ளன.

தரமற்ற ரோடால் அவதி

பாபு, விவசாயி: சுற்றித்திரியும் தெரு நாய்கள், காட்டுமாடுகளால் அச்சுறுத்தல் உள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் இப்பகுதியில் அம்மா கிளினிக் அமைக்கப்பட்ட நிலையில் அவை மூடப்பட்டதால் மருத்துவ வசதிக்கு நகரில் உள்ள தலைமை மருத்துவமனைக்கு 3 கி. மீ., தொலைவில் செல்ல வேண்டியது உள்ளது. கவுன்சிலர் வார்டுக்கு வருவதில்லை. தற்போது அமைக்கப்பட்ட சிமென்ட் ரோடு தரமற்ற நிலையில் பெயர்ந்து உள்ளது .

தகாத செயல்களால் தவிப்பு

யோவான், வியாபாரி : ஏராளமான குடியிருப்புகள் விடுதிகளாக செயல்படுகிறது. இதை முறைப்படுத்த வேண்டும். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கூச்சல், குழப்பம் இடுவது ,மது அருந்துவது உள்ளிட்ட தகாத செயல்களில் ஈடுபடுவதால் குடியிருப்பு வாசிகள் அவதிப்படுகிறோம். பாம்பார்புரம் பகுதிக்கு பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும். இங்குள்ள கழிப்பறைகள் முறையாக பராமரிக்கப்படாமல் துர்நாற்றம் வீசுகிறது. வார்டு கவுன்சிலர் யார் என தெரியாது நிலையே உள்ளது.

கண்டுக்காத கவுன்சிலர்

ராஜ்குமார், கட்டடத் தொழிலாளி : பாம்பார்புரம், வட்டக்கானல் அருகருகே உள்ளதால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மது அருந்தி கேளிக்கையில் ஈடுபடுகின்றனர். இவர்கள் வீசி செல்லும் பிளாஸ்டிக் உணவு பொட்டலங்கள், மது பாட்டில்களை பாம்பார்புரம் பகுதியில் வீசி செல்வதால் துர்நாற்றம் வீசிகிறது. தெருக்களில் அதிவேகமாக இயக்கப்படும் டூவீலர்களால் விபத்து அபாயம் உள்ளது. இதன் அருகே உள்ள தனியார் நட்சத்திர விடுதி கழிவுநீர் காலை, மாலையில் திறந்து விடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. கவுன்சிலரிடம் குறைகளை கூறினாலும் கண்டு கொள்வதில்லை.

அறியாமல் பேசுகின்றனர்

விஜி, கவுன்சிலர் (தி.மு.க.,) : வார்டில் ரூ. 1 கோடிக்கு வளர்ச்சிப்பணிகள் செய்யப்பட்டுள்ளது. காட்டுமாடு பிரச்னைக்கு வனத்துறை மூலம் கோரிக்கை விடுக்க தற்போது நடமாட்டம் குறைந்துள்ளது. இருந்த போதும் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். தெருநாய்களை கட்டுப்படுத்த ப்ளூ கிராஸ் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார் விடுதி கழிவுநீர் வனப்பகுதியில் விடுவது குறித்து நகராட்சி மூலம் ஆய்வு செய்தபோது அவர்கள் குடிநீர் தொட்டியை தூய்மைப்படுத்தி அதன் கழிவு நீரையே வெளியேற்றியது தெரிய வந்தது. மற்றபடி வேறு தண்ணீர் ஏதும் இல்லை. மாலை நேரங்களில் கூடுதல் பஸ் வசதி செய்ய போக்குவரத்து கழகத்திடம் தெரிவிக்கப்படும் . பள்ளி நேரங்களில் வேன் வசதி உள்ளது. ரேஷன் பொருள்கள் குறித்த நேரத்தில் சப்ளை செய்ய அறிவுறுத்தப்படும். மற்ற வார்டுகளில் உள்ள ரோடுகள் மிக மோசமாக உள்ளது. எனது வார்டில் உள்ள ரோடுகள் குறைந்த அளவே சேதமடைந்துள்ளது. வார்டுக்கு வருவதில்லை, கவுன்சிலர் யார் என கூறியவர்கள், காலை, மாலையில் நான் வருவதை அறியாமல் பேசுகின்றனர். ஒவ்வொருவரின் வீடுகளை தட்டி நான் தான் கவுன்சிலர் என கூற முடியாது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை